IND vs AUS: அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்… இந்திய நேரப்படி எப்போது பார்க்கலாம்?

India vs Australia Adelaide Test IST Timings: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இன்னும் நான்கு போட்டிகள் இருக்கும் நிலையில், இதில் இன்னும் 3 போட்டிகளை வென்றால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும். 

இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்திலும், நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்திலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்திலும் நடைபெற இருக்கிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நாளை மறுநாள் (டிச. 6) தொடங்கும் இந்த போட்டியை எதிர்நோக்கி இந்திய அணி வீரர்கள் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய நேரப்படி எப்போது பார்ப்பது?

அந்த வகையில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் பகலிரவாக நடைபெறும் நிலையில் இந்தியாவில் எப்போது நேரலையில் பார்க்கலாம் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இந்த போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்கி, இரவு 9.30 மணிவரை இந்த போட்டி நடைபெறும். இருப்பினும் குறைந்த ஓவர்கள் வீசப்பட்டால் அரைமணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்படும். அதாவது ஆஸ்திரேலியாவில் இரவு 10 மணிவரை போட்டி நடைபெறும்.

இந்திய நேரப்படி தினமும் காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும். முதல் செஷன் காலை 9.30 – 11.30 மணிவரை நடைபெறும். தேநீர் இடைவேளை மதியம் 11.30 -12.10 வரை இருக்கும். பகலிரவு ஆட்டம் என்பதால் முதல் செஷன் முடிந்த உடன் 40 நிமிடங்கள் தேநீர் இடைவேளை விடப்படும். சாதாரண டெஸ்ட் போட்டியில் 20 நிமிடங்கள்தான் தேநீர் இடைவேளை இருக்கும். 

நேரலையில் எங்கு பார்ப்பது?

தொடர்ந்து இரண்டாவது செஷன் இந்திய நேரப்படி மதியம் 12.10 – 2.10 மணிவரை நடக்கும். இந்த நேரத்தில் அடிலெய்டில் பொழுது சாயும் வேளை வந்துவிடும். இந்த நேரத்தில் மைதானத்தில் கோபுரம் மூலம் வெளிச்சம் பாய்ச்சப்படும். தொடர்ந்து இரவு உணவு இடைவேளை இந்திய நேரப்படி மதியம் 2.10 – 2.30 மணிவரை இருக்கும். சாதாரண டெஸ்ட் போட்டியில் மத்திய உணவு இடைவேளை 40 நிமிடங்கள் இருக்கும், இதில் இரவு உணவு இடைவேளை 20 நிமிடங்கள் இருக்கிறது. 

மூன்றாவது செஷன் இந்திய நேரப்படி மதியம் 2.30 – மாலை 4.30 வரை இருக்கும். தேவைப்பட்டால் மாலை 5 மணிவரை ஆட்டம் நடைபெறும். அதாவது ஏறத்தாழ இந்தியாவில் ஒரு சாதாரண டெஸ்ட் போட்டியை பார்த்தால் எந்த நேரத்தில் பார்ப்பீர்களோ, அதே நேரத்தில்தான் நீங்கள் இந்த போட்டியையும் பார்க்கலாம். அதேநேரத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனலில் நீங்கள் தொலைக்காட்சியிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஓடிடியிலும் காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.