பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாஃபியா லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். ஏற்கனவே சல்மான் கானை கொலைசெய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் முயற்சி செய்தனர். அதோடு சல்மான் கானின் நெருங்கிய நண்பரான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மும்பையில் சுட்டுக் கொலைசெய்தனர். இச்சம்பவங்களை தொடர்ந்து சல்மான் கானுக்கு எப்போதுமில்லாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சல்மான் கானின் படப்பிடிப்பின் போது பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. மும்பை மாகிம் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்த ஒருவர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றார்.
உடனே அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் ‘பிஷ்னோயை கூப்பிடவா’ என்று மிரட்டும் தொனியில் பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்துச்சென்றனர். அவரை பிடித்துச்சென்று விசாரித்தபோது சல்மான் கானின் ரசிகர் என்றும், அவரை பார்க்கும் நோக்கத்தில் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சல்மான் கானுக்கு குறிவைத்த கொலையாளிகள்
மும்பையில் பாபா சித்திக்கை கொலை செய்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கொலையாளிகளுக்கு மூன்று கொலை செய்ய வேலை கொடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதில் பாபா சித்திக், அவரது மகன் சீசான் சித்திக், சல்மான் கான் என்று தெரிய வந்தது. பாபா சித்திக் கொலையில் கைதானவர்களிடம் விசாரித்தபோது சல்மான் கான் வீட்டிற்கு சென்று ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. ஆனால் சல்மான் கான் வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததை தெரிந்து கொண்டு தங்களது இலக்கை பாபா சித்திக் பக்கம் திருப்பி இருந்தனர்.
சல்மான் கான் எப்போதும் தனது காரில் வீட்டு கட்டிடத்திற்குள் வைத்து ஏறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். வீட்டிற்கு வெளியில் காரை விட்டு இறங்குவது கிடையாது. எனவே சல்மான் கானை அணுகுவது கொலையாளிகளுக்கு முடியாத காரியமாக இருந்தது என்று போலீஸார் தெரிவித்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபா சித்திக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது மும்பை போலீஸார் மொக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.