அனர்த்த நிவாரணங்களின் போது மோசடிகள் இடம்பெறுவதற்கான ஒரு வரலாறு மீண்டும் உருவாக இடமளிக்க மாட்டோம் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக , நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையில் ஒரு ரூபாய் கூட மோசடி மற்றும் ஊழல் இடம்பெறவில்லை என்றும், பல குழுக்கள் தாமாக முன்வந்து அனர்த்த முகாமைத்துவத்தில் தலையிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அனர்த்த காலங்களின் போது நிவாரணம் வழங்குவதற்காக வழங்கப்பட்ட உணவுப்; பொதிகள் மூலம் மேற்கொண்ட சுரண்டல் யுகத்தையும் முடிவுக்குக் கொண்டுவர முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
துரித நிவாரணத் திட்டத்தின் கீழ் 2024 நவம்பர் 21ஆம் திகதி முதல் இன்றுவரை 149 மில்லியன் ரூபாய் அனர்த்த நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட போதிலும், 2024 மே மாதம் 15ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி வரையான ஐந்து மாதங்களுக்கும் 307 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.