சென்னை: பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை விழுந்து பலியான இளைஞர் சையத் குலாப் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டு நீண்ட கால பயன்பாட்டாலும் தட்ப வெட்ப மாறுப்பாட்டாலும் கட்டடம் சிதலமடைந்த நிலையில் இருந்தது.
தொழில் நுட்ப வல்லுநர் குழுக்களை கொண்டு ஆய்வு செய்ததில் இக்கட்டடங்களை அகற்றிவிட்டு மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் 20.01.2022 மற்றும் 09.03.2022 ஆகிய நாட்களில் குடியிருப்புகளை காலி செய்ய வாரியத்தால் அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டது.
மேலும், 08.07.2022 அன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலும் 18.09.2022 அன்று தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலும் 09.09.2024 வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலும் மற்றும் 23.09.2024, 06.11.2024 மற்றும் 11.11.2024 ஆகிய நாட்களில் வாரிய நிர்வாகப் பொறியாளர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கிராம மீனவர் சபையினருடன் பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த கூட்டங்களில் குடியிருப்பை காலி செய்வதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் நேற்று (04.12.2024) இரவு 134-வது பிளாக் மூன்றாம் தளத்தில் ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் சையத் குலாபுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது குடும்பத்திற்கு அரசின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டி குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இடைப்பட்ட காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000- கருணைத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.