2026 சட்டமன்றத் தேர்தலில், மலர்க் கட்சியின் தலைவர் கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாம். எனவே, “அந்தத் தொகுதியில் இப்போதே அதற்கான வேலைகளைத் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் முடுக்கிவிட்டிருக்கிறார்” என்கிறார்கள் மலர்க் கட்சி சீனியர்கள். இந்த விவகாரம் ஆளும் தரப்புக்கும் எட்ட, “எது எப்படி இருந்தாலும், மலர்க் கட்சித் தலைவர் மட்டும் ஜெயித்துவிடவே கூடாது. அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ…. அதைச் செய்யுங்கள்” எனத் தலைமையிடமிருந்து பொறுப்பு மாண்புமிகுவுக்குக் கறார் உத்தரவு பறந்திருக்கிறதாம். இதையடுத்து, `மலர்க் கட்சித் தலைவருக்கு எதிராக யாரை நிறுத்தலாம்…’ என்ற ஆலோசனையைத் தீவிரமாக்கிய மாண்புமிகு, ‘தேவை ஏற்பட்டால் நானே நேருக்கு நேர் களமிறங்கவும் தயார்’ எனத் தலைமைக்கு பதில் அனுப்பியிருக்கிறாராம்!
‘அ.தி.மு.க-வில் எப்படியாவது தனக்கான இடத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும்’ எனத் தவியாய்த் தவிக்கிறாராம் சின்ன தலைவி. அதற்காக, சமீபத்தில் மன்னார்குடிக்கு வந்தவர், பண்ணை வீட்டில் நெருக்கமானவர்களுடன் ஆலோசனை செய்திருக்கிறார். அப்போது, “கட்சிக்குள் தற்போது நமக்குச் சாதகமாகச் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி, இன்னும் சிலரை நமக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவைக்க வேண்டும். அதற்கான வேலைகளைச் செய்யுங்கள்” என்றிருக்கிறார் சின்ன தலைவி. உடனிருந்தவர்களோ, “நீங்கள் சொல்வதுபோல ஆதரவுக் குரல் கொடுக்கப் பலரும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், நம்மிடமும் அவர்கள் ‘உரிய ஆதரவை’ எதிர்பார்க்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை நீங்கள்தான் செய்ய வேண்டும்” என சின்ன தலைவியிடம் சொல்ல… “முதலில் அவர்களின் ஆதரவைத் திரட்டுங்கள். பிறகு நம் ‘ஆதரவை’ தருவோம்” என்றிருக்கிறார் சின்ன தலைவி. “ம்க்கும்… அரசியல்ல ஆதரவுங்றது ‘கையில காசு… வாயில தோசை’ சமாசாரம். இப்படியே வெறுங்கையில விசிறிக்கிட்டிருந்தா நினைக்கிறது ஒருபோதும் நடக்காது” எனப் புலம்பியபடியே துண்டை உதறிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்கள், ஆலோசனையில் பங்கேற்றவர்கள்!
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கான தீர்மானங்களைத் தயார்செய்வதில், எம்.ஜி.ஆர் மாளிகையில் மிகப்பெரிய வாக்குவாதமே நடக்கிறதாம். ‘சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் நேரம்… மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான தீர்மானங்களை அழுத்தமாக முன்வைக்க வேண்டும். அப்போதுதான், பா.ஜ.க-வுடன் நாம் இணக்கமாக இல்லை என்பதைத் தொண்டர்களுக்கு உணர்த்த முடியும்’ என்று சீனியர்கள் அட்வைஸ் செய்தார்களாம்.
ஆனால், ‘ஏற்கெனவே நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மையமாக வைத்துத்தான் ரெய்டுகளை அரங்கேற்றிவருகிறது டெல்லி. இந்த நேரத்தில் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி, அது டெல்லியை மேலும் கோபத்துக்கு ஆளாக்கிவிட்டால், நமக்குத்தான் சிக்கல்’ என்று தலைமை தயக்கம் காட்டுகிறதாம். ‘இந்த விஷயத்தில் முடிவுகள் எட்டாமல், விழித்துக்கொண்டிருக்கிறது பொதுக்குழு விழா கமிட்டி’ என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை சீனியர்கள்!
“மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றுவிட்ட நிலையில், இனியாவது முறைப்படி ஆண்டுதோறும் பொதுக்குழுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்” என்ற பேச்சு நாம் தமிழர் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. ஆனால், “இது குறித்துத் தலைமை எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை” எனப் புலம்புகிறார்கள் ராவணன் குடில் தம்பிகள். என்னவென்று விசாரித்தால், “நிர்வாகிகள் பலரும் தொடர்ச்சியாகக் கட்சியிலிருந்து வெளியேறிவருவது, கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகளில் பலரும்கூட தலைமைமீது அப்செட்டில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ‘பொதுக்குழுவையே நடத்தலாமா, வேண்டாமா…’ என்ற தீவிர யோசனையில் இருக்கிறார் அண்ணன்” என்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.
“பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு மாநில அந்தஸ்து கிடைத்திருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும். இல்லையென்றால், சின்னத்தை இழந்ததைப்போலக் கட்சியும் காணாமல்போய்விடும்” எனப் புலம்புகிறார்கள் நா.த.க சீனியர்கள்!
அரசு கால்நடைக் கல்வி நிறுவனத்தில், பதிவுப் பொறுப்பில் இருக்கும் அதிகாரியின் பதவிக்காலம் விரைவிலேயே முடியவிருக்கிறது. ஓய்வுபெற விருப்பமில்லாத அந்த அதிகாரி, காலியாக இருக்கும் மற்றொரு பெரிய பதவியைப் பிடிக்கக் காய்களை நகர்த்திவருகிறாராம். ‘இதற்காக எத்தனை ஸ்வீட் பாக்ஸுகள் வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’ எனத் தன்னுடைய அலுவலக சகாக்களிடம் வெளிப்படையாகவே சொல்கிறாராம்.
அதேநேரம், காலியாகவிருக்கும் இடத்தைப் பிடிக்க, தனக்கிருக்கும் மத்திய அரசுத் தொடர்புகள் மூலம் காய்நகர்த்திவருகிறாராம் பேராசிரியர் ஒருவர். பதவியைப் பிடிக்க அதிகாரிகள் அரங்கேற்றிவரும் அட்ராசிட்டிகளைப் பார்க்கும் துறை சீனியர்களோ, “ஒருவர், `ஸ்வீட் பாக்ஸுகளை இறக்குகிறேன்’ என்கிறார். மற்றொருவரோ, `மத்திய அரசின் சப்போர்ட் இருக்கிறது’ என்கிறார். இவங்களுக்கெல்லாம் எப்படி இவ்வளவு ஸ்வீட் பாக்ஸுகள்… இந்த அளவு தொடர்புகள்…” எனத் திகைத்துக் கிடக்கிறார்களாம்!