கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதனை டிசம்பர் 31ஆம் திகதி அளவில் முடிவுறுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைக்கால கணக்கு அறிக்கைக்கான யோசனைகளை அங்கீகரித்தல் தொடர்பான விவாதத்தை இன்று (05) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் இதனை வெளியிட்டார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறை தாமதமடைவதனால் மாத்திரம் மேலதிக பற்றாக்குறை வட்டியாக 1.7 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியேற்படும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி அமைச்சர் ;
தாங்கிக் கொள்ள முடியாத கடன் சுமைக்குள் நாம் சிக்கியுள்ளோம். உண்மையில் வாங்கிய கடனில் இருந்து பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டிருந்தால், அதன் பலனை இப்போது அனுபவித்திருக்க வேண்டும். இதுவரை காலமும் வாங்கிய கடனை அவ்வாறே நாட்டின் உற்பத்தி செயல்முறைக்கு பயன்படுத்தாமையினால் தான், அக்கடனில் வட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
“இடைக்கால நிலையான கணக்கின் முதல் நான்கு மாதங்களுக்கு 1000 பில்லியன் ரூபா தொடர்ச்சியான செலவுகள் (வாடகை தவிர)1,000 பில்லியன் ரூபாய்களும், மூலதனச் செலவுகளுக்காக 425 பில்லியன் ரூபாய்களும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு மேலதிகமாக ஏனைய கடன் சேவை முறைகளுக்கு 1, 175 பில்லியன் ரூபாய்களும் அவசியம். அதன்படி மொத்த மதிப்பீடு 2,600 பில்லியன் ரூபாய்களாகும்.
அரசாங்கத்தின் வருமான மதிப்பீடு 1,600 பில்லியன் ரூபாய்கள் எனவும் அடிப்படைக் கடன் பெற்றுக் கொள்வதற்கான வரையறை 1,000 பில்லியன் ரூபாய்கள் ” என்றும் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ மேலும் தெளிவுபடுத்தினார்.