நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ரயில்வே சட்டத் திருத்த மசோதா குறித்து நேற்று (டிசம்பர் 4) விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை…
“கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வே துறையில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. தென் மாநில ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இந்த வருவாயில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், மத்திய ரயில்வே பட்ஜெட்டில் வெறும் 2.5 சதவிகித நிதிதான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டம் 2006ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2011ஆம் ஆண்டு வரை அதற்கான பணிகள் நடந்தன. அதன் பிறகு நடக்கவே இல்லை.
கடந்த ஆண்டு, இந்தத் திட்டத்திற்கு 50 கோடி ஒதுக்கியிருப்பதாக பட்ஜெட்டில் அறிவித்தார் மத்திய ரயில்வே துறை அமைச்சர். கடந்த பட்ஜெட்டிலும், தமிழ்நாடு ரயில்வேக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்தார். ஆனால், அதில் ஒரு ரூபாய் கூட அந்தப் புதிய பாதை திட்டத்திற்குச் சென்று சேரவில்லை.
இதற்குக் காரணம் கேட்டால், ‘மாநில அரசு ஒத்துழைக்கவில்லை’ என்று ரயில்வே துறை அமைச்சர் பழிபோடுகிறார். ஆனால், இந்த விஷயத்தில் அவர்கள் பக்கத்தில் தான் தாமதம்.
மாநில அரசு செய்ய வேண்டிய ரயில்வே பணிகள் அனைத்தும் சரியான காலத்தில் நடந்து முடிந்துவிடுகிறது. மத்திய அரசு சார்பாக நடக்கும் பணிகளுக்குத்தான் கால தாமதம் ஆகின்றன. ரயில்வே பணிகளுக்காக வனத்துறை அனுமதி வேண்டி மாநில அரசு விண்ணப்பித்திருப்பதற்கும் மத்திய அரசு ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்கின்றது. இதை அவர்கள் சரி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…