அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? – விசிக விளக்கம்

சென்னை: நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்காதது குறித்து விசிக விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சட்டமேதை அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரைக் கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன். அவரை யாரும் பின்னிருந்து வழிநடத்த முடியாது. சில அரசியல் தரகர்கள் அப்படி முயற்சிக்கிறார்கள்.

சென்னையில் டிச.6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் அவர் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். 2001-ம் ஆண்டு முதன்முறையாக திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குப் போனவர் திருமாவளவன். 2003-ம் ஆண்டு பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

பதவிதான் வேண்டுமென்றால் திமுக தலைவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு பதவியில் தொடர்ந்திருக்கலாம். ஆனால், கொள்கை முக்கியமெனப் பதவியைத் துறந்தார். அப்படிப்பட்ட கோட்பாட்டு உறுதிமிக்கத் தலைவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டுசெல்ல முடியும் என சில தரகர்கள் முயற்சிப்பது அரசியல் சோகமாகும். அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என அவர் கூறவில்லை. அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும், பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார்.

ஆனால், நூல் வெளியீட்டாளர்கள் திருமாவளவனை புறக்கணித்துவிட்டு பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், திருமாவளவன் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது அவரை மட்டுமல்ல, அம்பேத்கரையும் அவமதிப்பது ஆகும். நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கரும், திருமாவளவனும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வார இதழ் மற்றும் விசிக துணை பொது ச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்புக்கு நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட 36 பேர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.