புதுடெல்லி: நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணி செல்ல இருப்பதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து டெல்லி – ஹரியானா எல்லை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் டிராக்டர்களில் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி இன்று (நவ.6) பேரணி செல்கின்றனர்.
இதற்காக பஞ்சாப் – ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையில் நேற்று விவசாயிகள் குவிந்தனர். விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல நொய்டாவைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். டெல்லிக்குள் நுழைவதற்கு முன்பாகவே விவசாயிகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் ஒவ்வொரு கிராமத்திலும் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நேற்று இரவு முதலே முன்னெச்சரிக்கையாக விவசாய சங்கங்களைச் சேர்ந்த பலரையும் போலீஸார் இரவோடு இரவாக கைது செய்ததாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னதாக ஷம்பு எல்லையில் விவசாய சங்க தலைவர்களுடன் பஞ்சாப் காவல்துறை டிஐஜி மந்தீப் சிங் சித்து தலைமையில் உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பேட்டியளித்த டிஐஜி மந்தீப் சிங் சித்து, “டெல்லி நோக்கி அமைதியாக நடை பயணம் மேற்கொள்ளப்போவதாகவும், டிராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை எனவும் விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர்” என்றார்.
101 விவசாயிகள் ஜோடியாக ஷம்பு பகுதியில் இருந்து டெல்லி நோக்கி இன்று மதியம் 1 மணிக்கு தங்களின் ஜோடி பேரணி அணிவகுப்பை தொடங்குவார்கள் என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.