சென்னை: “தமிழகத்தில் சிலர், ஓரிடத்தில் நிகழ்ந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளாமல், தெரிந்திருந்தாலும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி திராவிட மாடல் அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களது சாதி வெறி, மதவெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணிலே, அம்பேத்கர் மண்ணிலே ஒருபோதும் நிறைவேறாது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (டிச.6) நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் முதல்வர் பேசுகையில், “இந்த சமூகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எத்தனை செய்தாலும், திமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க களப்பணியில் ஈடுபடுகிற தூய்மைப் பணியாளர்கள்தான். அரசின் பணிகளை ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டும்போது நான் மனதுக்குள் தூய்மைப் பணியாளர்களைத் தான் நினைத்துக் கொள்வேன்.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், மின் வாரியப் பணியாளர்கள், அனைவரும் சேர்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஆற்றிய பணிகளால்தான், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. நான் எவ்வளவு நன்றி சொன்னாலும், உங்களது தொண்டுக்கு ஈடாகாது. அதனால்தான் உங்களுடைய சுயமரியாதையை, உங்களது பணிக்கான மரியாதையைக் கொடுக்க உங்களில் ஒருவனாக, உங்களுடன் நான் இருக்கிறேன்.
என்னைப் பொருத்தவரை, தூய்மைப் பணியாளர்கள் என்று சொல்வதைவிட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்றுதான் கூற வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும், பாராட்டுக்களும். தூய்மைப் பணியாளர் நலனுக்காக, தூய்மைப் பணியாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. அந்த வாரியம் தொடங்கப்பட்டது முதல் 2021ம் ஆண்டு வரை, 18,275 உறுப்பினர்கள் மட்டும்தான் பதிவு செய்திருந்தனர். திமுக அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கடந்த மூன்றாண்டுகளில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 775 உறுப்பினர்கள் இப்போது பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவக் காப்பீட்டு அட்டை கிடைப்பதில் பிரச்சினை இருப்பது எனது கவனத்துக்கு வந்தது. உடனடியாக அதை வழங்க நான் உத்தரவிட்டேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் நிறைவேற்றாத புதுமைத் திட்டங்களை நாம் நிறைவேற்றி வருகிறோம். சமூகநீதி வழியாக சமத்துவ சமுதாயத்தைப் படைக்க பாடுபடுகிறோம். இந்த லட்சிய வழியில் ஒருசில தடைகள், இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. உடனே, சிலர் அதை மட்டும் பெரிதுபடுத்தி அரசியல் லாபம் பார்க்க பேசுகின்றனர். இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா? என்றெல்லாம் கேள்வி கேட்கின்றனர்.
ஓரிடத்தில் நிகழ்ந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளாமல், தெரிந்திருந்தாலும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி திராவிட மாடல் அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களது சாதி வெறி, மதவெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணிலே, அம்பேத்கர் மண்ணிலே ஒருபோதும் நிறைவேறாது.” என்று பேசினார்.