இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் முதுமலை வனத்தில் அமைந்திருக்கிறது, பொக்காபுரம் மாரியம்மன் ஆலயம். புலிகள் வாழும் அடர்ந்த காட்டிற்குள் அமைந்திருக்கும் இந்த அம்மனை தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா ஆகிய எல்லையோர மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் திருத்தேர் விழாவைக் காண உள்ளூர் பழங்குடி மக்கள் முதல் வெளிநாட்டு பயணிகள் வரை பங்கேற்பது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. யாக சாலையில் கும்ப கலசம் ஸ்தாபித்தல், முதற்கால யாக பூஜை, மருந்து சாத்துதல் உள்ளிட்ட விஷேச பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும்,
9.10 மணிக்கு யாக சாலையில் இருந்து வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசம் எடுத்துச் செல்லப்பட்டு கோயிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9.20 மணிக்கு மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரில் நனைந்து வழிபட்டனர்.