டாக்கா,
வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்து பேரணி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என்ற தேச துரோக குற்றச்சாட்டையடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை மக்களுக்கு எதிராக அராஜகங்கள் நடந்து வருகின்றன. இந்துக்களின் கடைகள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், பலர் காயமடைந்து உள்ளனர். சிறுபான்மையினரின் சொத்துகளுக்கு தீ வைத்தும், சொத்துகளை சூறையாடியும் வருகின்றனர்.
இந்நிலையில், வங்காளதேசத்தில் உள்ள வங்காளதேச தேசியவாத கட்சியினர், இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்கும்படி கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததற்காகவும், அகர்தலா நகரில் வங்காளதேச துணை தூதரகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளை வாங்குங்கள் என்ற பேனர்களுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அக்கட்சியின் மூத்த இணை பொது செயலாளரான ருஹுல் கபீர் ரிஸ்வி, கட்சி ஆதரவாளர்களின் இந்திய எதிர்ப்பு கோஷங்களுக்கு மத்தியில், அவருடைய மனைவியின் இந்திய சேலையை எரித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்களுடைய நாட்டு கொடியை அவர்கள் கிழித்து உள்ளனர். அவர்களுடைய (இந்திய) பொருட்களை நாங்கள் புறக்கணிப்போம் என்று பேசினார். இந்திய சேலைகள், சோப்புகள், பற்பசை அல்லது இந்தியாவில் இருந்து வரும் எந்த பொருட்களையும் பெண்கள் வாங்க கூடாது என ரிஸ்வி கூறினார்.
இந்தியாவிடம் இருந்து, அதிக அளவில் அரிசி, வெங்காயம், கோதுமை போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதுடன், ஆலைகளுக்கான மூலப்பொருட்ளையும் அவர்கள் கொள்முதல் செய்கின்றனர்.