லாகூர்,
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சவுத் வசீரிஸ்தான் மற்றும் லக்கி மார்வாத் மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை பற்றிய ரகசிய தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படை தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.
சவுத் வசீரிஸ்தானுக்கு உட்பட்ட சாராரோகா பகுதியில் நடந்த இந்த சோதனையில் கார்ஜி தலைவரான கான் முகமது என்ற கோரியாய் என்பவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். லக்கி மார்வாத் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இவர்கள் தவிர, 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கான் முகமது என்பவரும் ஒருவர் ஆவார். இவரை பிடித்து தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.
பாகிஸ்தானில் கடந்த நவம்பரில் 68 ராணுவ அதிகாரிகள் மற்றும் 127 பயங்கரவாதிகள் உள்ளிட்ட 245 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டில் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டு, அமைதி உறுதி செய்யப்படுவதற்கான பணியை பாதுகாப்பு படையினர் உறுதியான முடிவுடன் மேற்கொண்டு வருகின்றனர் என ராணுவ ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.