Ambedkar Book Launch: “அடுத்து தேர்தல் என்று ஒன்று வந்தால்…" – மேனாள் நீதிபதி சந்துரு

இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் அம்பேத்கரின் நினைவு நாளில் (டிசம்பர் 6), அவரின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் வகையில், `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை, விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறது. இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

Ambedkar Book Launch

இந்த நிகழ்ச்சியில், நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய், மேனாள் நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, விசிக துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், விஜய் நூலை வெளியிட சந்துரு அதைப் பெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய சந்துரு, “நம் எல்லோருக்கும் தலைவர் அம்பேத்கர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. சந்தேகம் இருப்பவர்கள் யாரும் இங்கே வரப்போவதில்லை. அம்பேத்கர் இறக்கும் வரை அவரின் பல கருத்துகள் வெளியிடப்படாமல் இருந்தது. அவர் இறந்த பிறகு அவரின் ஆவணங்களை எல்லாம் திரட்டி, நீதிமன்ற உத்தரவின் படி அவையெல்லாம் மகாராஷ்டிரா அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. மகாராஷ்டிரா அரசு அதை வாங்கி வைத்துக் கொண்டு வெளியிடவே இல்லை. பலர் அழுத்தம் தந்த பிறகுதான் 1956-ல் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் 1988-ல் வெளியிடப்பட்டது. பதினாறு தொகுதிகளை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டது. அதற்குப் பிறகுதான் அம்பேத்கர் தன் வாழ்நாளில் இத்தனை எழுத்துகளை எழுதிக் குவித்திருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். அம்பேத்கருக்கு மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகள் வந்தபோது, அம்பேத்கர் `எனக்கு இந்த பதவியோ இந்த சம்பளமோ தேவையில்லை. என்னுடைய மக்களுக்கு நான் வேலை செய்ய போகிறேன்.’ என்று சொன்னார்.

மேனாள் நீதிபதி சந்துரு

1936 முதல் 1956 வரை 20 ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தார். அவ்வளவு காலம் இருந்தாலும் அவர் எழுதிய புத்தகத்தை அவரால் வெளியிட முடியவில்லை. கடைசியில் ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். `நான் ஒரு புத்தகம் தயாரித்திருக்கிறேன். அதை வெளியிடுவதற்கு நாற்பதாயிரம் செலவாகும். அரசு கொடுத்தால் இதனை வெளியிடலாம். அதில் வரக்கூடிய வருமானத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன்.’ என்று சொன்னார். அவர் இன்றைக்கு மறைந்து 68 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கு நாம் திரும்பத் திரும்ப பேசுகிறோமே அதுதான் அவரின் சிறப்பு. அம்பேத்கர் அப்படி என்ன சாதித்தார் என்று கேட்கலாம். இந்த நாடு சாதி அடிப்படையில் சாதிக்கொரு நீதி என்று இடத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இருந்தபோது ஒரு அரசியல் சட்டத்தை தயாரித்தார். இதைத்தான் கடந்த ஓராண்டாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டி வருகிறார். இதில் 397 பிரிவுகள் இருக்கிறது. இதில் 15-வது பிரிவை நீங்கள் பார்க்க வேண்டும். மதத்தின் பெயரிலோ, சமயத்தின் பெயரிலோ, சாதியின் பெயரிலோ, இடத்தின் பெயரிலோ இந்த அரசு யாரிடமும் வேறுபாடு காட்டாது என்று உரிமையை கொடுத்திருக்கிறார். அதுதான் இந்த சட்டத்தின் முதல் சாதனை. இந்த அரசியல் சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இதை காக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம், தூக்க வேண்டும் என்று சொல்பவர்கள் மறுபக்கம். அடுத்தவொரு தேர்தல் என்று ஒன்று வந்தால்… மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும். எனவே, இந்த புத்தகத்தை எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டும்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.