`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து இன்று வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், த.வெ.க தலைவர் விஜய் இந்த புத்தகத்தை வெளியிட்டார்.
புத்தகத்தை வெளியிட்டு பேசிய விஜய், “பிறப்பால் நாம் அனைவரும் சமம். நீ எந்த சாதியில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயிரியல் கோட்பாட்டை உறுதி செய்யும் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை வழங்கியவர் அம்பேத்கர். இன்று அம்பேத்கர் உயிரோடு இருந்தால் இன்றைய இந்தியாவைப் பார்த்து பெருமைப்படுவாரா, வருத்தப்படுவாரா… இன்று நம் நாடு முழு வளர்ச்சியே அடைய வேண்டும் என்றால் அதற்கு நம் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கெல்லாம், அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான நியாயமான தேர்தல். அது அமைய ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய வலிமையான கோரிக்கை.
ஏப்ரல் 14 இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும். அதை, இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன். அதேசமயம், இன்றைக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாத ஒரு அரசு மேலே இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. இங்கிருக்கின்ற அரசு மட்டும் எப்படி இருக்கிறது. வேங்கைவயல் பிரச்னைக்கு சமூக நீதி பேசுகிற, இங்கே இருக்கின்ற அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி எனக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேத்கர் இன்று பார்த்தால் வெட்கப்பட்டுத் தலைகுனிவார். பெண்களுக்கு, மனித உயிர்களுக்கு எதிரான எத்தனையோ பிரச்சனைகள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு நல்ல அரசு.
தினமும் நடக்கின்ற பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதில், சம்பிரதாயத்துக்காக மழை நீரில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நாமும் சம்பிரதாயத்துக்காக சில நேரங்களில் அந்த மாதிரி செய்ய வேண்டியதாகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எங்கு என்ன பிரச்சனை நடந்தாலும், அவர்களின் உரிமைகளுக்காக உணர்வுப்பூர்வமாக இருப்பேன். மக்கள் உரிமைகளை மதிக்கத் தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூக நீதி பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் இருநூறு வெல்வோம் எனும் எகத்தாள ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வருகின்ற உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.” என்று கூறினார்.