நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளைகளில் சபைகளை ஒவ்வொரு நாள் காலையும் கிட்டதட்ட மூன்று மணி நேரம் சோதனை செய்வார்கள். எந்தவொரு நாச வேலையும் சபைகளுக்குள் நடந்துவிடக் கூடாது என்பதே இந்தச் சோதனைக்கான நோக்கம்.
அப்படியான சமீபத்திய மாநிலங்களவை சோதனையின் போது தெலுங்கானா எம்.பி அபிஷேக் சிங்வி சீட்டான 222-ல் பணக்கட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து நேற்று மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர், “நேற்று மாநிலங்களவையில் சோதனை நடந்தபோது, தெலுங்கனா எம்.பி அபிஷேக் சிங்வியின் சீட் நம்பர் 222-ல் பணக்கட்டு கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது சம்பந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று பேசியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அபிஷேக் சிங்வி தன்வி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த சம்பவத்தை முதன்முறையாக கேள்விப்படுகிறேன். நான் மாநிலங்களவைக்குச் செல்லும்போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை தான் எடுத்துச் செல்வேன். நேற்று மதியம் 12.57 மணிக்கு அவைக்குள் சென்றேன். மதிய ஒரு மணிக்கு வெளியே வந்துவிட்டேன். பிறகு, கேண்டீனில் அயோத்தியா ராமி ரெட்டியுடன் மதியம் 1.30 மணி வரை அமர்ந்திருந்தேன். பின்னர், நாடாளுமன்றத்தில் இருந்து வந்துவிட்டேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
“இந்த சம்பவத்தின் விசாரணை முடியும் வரை, எம்.பி-யின் பெயரை குறிப்பிடக்கூடாது” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தெரிவித்திருந்தார்.
“யார் சீட்டின் கீழ் பணம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவரின் பெயரை சொல்வதில் என்ன தவறு? மாநிலங்களவை தலைவர் சரியாகத் தான் சீட் நம்பரையும், அந்த சீட்டில் அமர்ந்திருக்கும் நபரையும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் என்ன தவறு… இதற்கு எதற்கு எதிர்ப்பு? டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாடே சென்று கொண்டிருக்கும்போது, பணக்கட்டை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவது சரியா?” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி கேட்டிருக்கிறார்.