இந்திய எல்லைக்குள் நுழைந்த மியான்மர் மீனவர்கள் நான்கு பேர் படகுடன் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மியான்மர் நாட்டு மீனவர்கள் 4 பேர் அவர்களின் பாய்மரப் படகுடன் இந்திய கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், நேற்று ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை அதிகாரிகள் இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் பாய்மரப்படகு ஒன்று நிற்பதை கண்டு சந்தேகித்து விசாரணை நடத்தினர்.

அது மியான்மர் நாட்டு மீன்பிடி படகு என்பதும் அவர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இருப்பதையும் தெரிந்து கொண்ட இந்திய கடற்படையினர் அந்த படகில் இருந்த மீனவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.

இன்று காலை அவர்களை நாகை துறைமுகத்துக்கு அருகே கடலுக்குள் வைத்து கடலோர காவல் படை துணை தளபதி கணேஷ், கடலோர காவல் படை காரைக்கால் நிலையத் தளபதி சவுமே சண்டோலா முன்னிலையில் நாகை மாவட்ட கடலோர கடலோர குழும ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் அந்த மீனவர்களை ஒப்படைத்தார்.

மியான்மர் மீனவர்களின் படகு.

அவர்கள் அங்கிருந்து விசைப்படகு மூலம் நாகை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். புயல் சின்னத்தால் கடலில் ஏற்பட்ட காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் தத்தளித்தபடி இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. கைதான நான்கு மீனவர்களும் பர்மிஷ் மொழி மட்டுமே பேசுகின்றனர்.வேறு மொழி தெரியாததால் தற்பொழுது வரை சைகையில் மட்டுமே அவர்களால் விவரம் கூற முடிகிறது.

நாகை கடலோர காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ‘இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் (அந்நிய கப்பல்கள் மூலம் மீன்பிடித்தல்)’ சட்டத்தின் (The Maritime Zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act வழக்கு பதியப்பட்டு, சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.