காதலை சிலர் தவறுதலாக பயன்படுத்தி விடுகின்றனர். அதுவும் பெண்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. பெங்களூருவை சேர்ந்த 20 வயது பெண் திருமண ஆசையில் தனது காதலனிடம் பெரிய அளவில் இழப்பை சந்தித்து இருக்கிறார். அவர் மோகன் குமார் என்பவருடன் போர்டிங் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார். அதன் பிறகு இருவருக்கும் இடையே தொடர்பு விட்டுப்போய்விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
பல இடங்களுக்கு இருவரும் தனியாக சென்றுள்ளனர். அங்கு திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணுடன் மோகன் குமார் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில் இருவரும் தனிமையில் இருக்கும் போது அதனை மோகன் குமார் வீடியோ எடுத்துள்ளார். அதனை தனது தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று மோகன் குமார் சொன்னதை அப்பெண்ணும் நம்பினார்.
அவரின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மோகன் குமார் சில வீடியோக்களில் தனது முகம் தெரியாத வகையில் எடுத்துள்ளார். அந்த ஆபாச வீடியோவை காட்டி அப்பெண்ணை மிரட்டி இருக்கிறார். வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அப்பெண் தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.25 கோடியை மோகன் குமார் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார்.
இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறுகையில், ”இது திட்டமிடப்பட்ட ஒரு குற்றம். குற்றவாளி மொத்தம் 2.57 கோடியை மிரட்டி பறித்துள்ளான். பணம் மட்டும் 1.32 கோடியை வாங்கி இருக்கிறான். இது தவிர ஆடம்பர கார், ஆடம்பர வாட்ச், தங்க நகைகளை அப்பெண் மோகன் குமாரிடம் கொடுத்துள்ளார். அவரிடம் மேற்கொண்டு கொடுக்க எதுவும் இல்லை என்ற நிலை வந்தபோதும் தொடர்ந்து மோகன் குமார் கேட்டுக்கொண்டே இருந்தார். எனவேதான் அப்பெண் போலீஸில் வந்து புகார் செய்தார். மோகன் குமார் அதிகமான நேரங்களில் பணத்தை தனது தந்தையின் வங்கிக்கணக்கிற்கு அனுப்ப சொல்லி இருக்கிறார். மோகன் குமாரை கைது செய்து ரூ.80 லட்சத்தை பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…