சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அந்தத் திரையிடலுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அப்போது ரசிகர்களின் திடீர் கூட்டம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, ஹைதராபாத் காவல்துறை நடிகர் அல்லு அர்ஜுன், அவரின் பாதுகாப்புக் குழுவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று (டிசம்பர் 6) பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 நிதியுதவியும், சிகிச்சையிலிருக்கும் சிறுவனின் மருத்துவச் செலவையும் அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் ‘எக்ஸ்’ பக்கத்தில், “சந்தியா திரையரங்கில் நடந்த சோகமான சம்பவத்தால் மனவேதனை அடைந்தேன். நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துக்கத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தை நேரில் சந்திப்பேன். இந்த சவாலான சூழலில் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. நல்லெண்ணத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ரூ.25 லட்சம் வழங்குகிறேன். மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று ரசிக்கும் வகையில் திரைப்படங்களைத் தயாரிக்கிறோம். திரையரங்கம் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் கவனமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…