பண்டிகை காலத்தில் சந்தையில் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்க மாட.டோம் என்று வர்த்தக, வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களுக்காக முன் வக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாவது நாளான நேற்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சந்தையில் அதிகரித்துள்ள, இலாபமீட்டும் மாபியாக்களை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் தலையிடுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;
மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி அரிசி சந்தை மாபியாவை ஏற்படுத்தவும் சிலர் முயற்சி செய்தனர்.
அதனை அனுமதிக்காது சந்தையில் அரிசியை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது உடனடியாக சதொச ஊடாக அரிசியை விநியோதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கான அதிகூடிய சில்லறை விலை தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச வங்கிகளில் கடன் பெற்று, எனினும் மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி அரிசி சந்தை மாபியாவை உருவாக்கும் நபர்களுக்கு எதிராக அடுத்த தடவை கடன் வழங்கும் போது நடவடிக்கை எடுக்கத் தீரமானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
ஒரு நாளைக்கு சந்தையில் 6,500 மெற்றிக் தொன் வரை அரிசி நுகரப்படுகின்றது.
மாதத்திற்கு நாட்டில் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் வரையான அரிசிக்கான தேவை காணப்படுகின்றது.
நுகர்வோரின் தேவைக்கு அதிகமாக விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் நுகர்வுத் தேவைக்காக அதிலும் பல்வேறு கைத்தொழில்களுக்காக அரிசியை கொள்வனவு செய்கிறார்கள். விசேடமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்ற துறைகளுக்காகவும் இவ்வாறு கொள்வனவு செய்யப்படுகின்றது என்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெளிவுபடுத்தினார்.