டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள சஹாஸ்பூர் பகுதியின் லாங்கா சாலையில் கிரீன் ஹெர்பல் நிறுவனம் என்ற பெயரில் மூலிகை தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் மூலிகைக்கு பதிலாக சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்பேரில் போலீசார், போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு இணைந்து நடத்திய கூட்டு சோதனையில் போதைப்பொருள் தயாரிப்பது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தொழிற்சாலை உரிமையாளர் சஞ்சய் குமார் மற்றும் அவரது இரு கூட்டாளிகளான சிவகுமார் மற்றும் ரெஹ்மான் ஆகியோரை போலீசார் சம்பவ இடத்திலிருந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த தொழிற்சாலையை போலீசார் உடைத்து தரைமட்டமாக்கினர்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் ரிஷப் ஜெயின் மற்றும் கன்ஹையா லால் ஆகிய இரு பெயர்களை வெளிப்படுத்தியாக போலீசார் தெரிவித்தனர். அந்த இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை உரிமையாளரான சஞ்சய் குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செலாக்கி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும், அதன் உரிமையாளர் உஸ்மான், அந்த தொழிற்சாலையில் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை தயாரித்து வந்ததாகவும் கூறினார். மேலும் உஸ்மானுடன் பணிபுரியும் போது, மருந்துகளின் விற்பனை மற்றும் தேவை பற்றி அறிந்து கொண்டதாக சஞ்சய் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் போலீசாரால் உஸ்மான் கைது செய்யப்பட்ட பிறகு, சஞ்சய் 2023இல் கிரீன் ஹெர்பல் நிறுவனத்தின் பெயரில் உணவு உரிமத்தை எடுத்து அதன் மறைவில் போதை மருந்துகளை தயாரிக்க தொடங்கியது போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.