மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசில் மிகவும் முக்கியமான உள்துறையை தங்களின் தலைவர் கேட்பதாக அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தெரிவித்துள்ளது. மேலும், மகாயுதி கூட்டணியின் மூன்று தலைவர்களும் இலாகா ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து, ஷிண்டேவின் சிவசேனா அணியைச் சேர்ந்த ராய்கத் தொகுதி எம்எல்ஏ கூறுகையில், “தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராக இருந்தபோது (முந்தைய ஷிண்டே தலைமையிலான அரசில்) அவர் உள்துறையை கையில் வைத்திருந்தார். இப்போது, சாஹேப் (ஷிண்டே) அதே விஷயத்தைத் திரும்பக் கேட்கிறார். பேச்சுவார்த்தை (இலாகா ஒதுக்குவது தொடர்பாக) நடந்து வருகிறது. இதே கோரிக்கை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இலாகா ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடையும் என்று நம்புகிறோம்” என்றார்.
ஃபட்னாவிஸ், ஷிண்டே, பவார் எம்எல்ஏ-களாக பதவியேற்பு: இதனிடையே, மகாராஷ்டிரா பேரவையின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தின் முதல்நாளில் மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப் பேரவை உறுப்பினராக சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல், துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். சனிக்கிழமை காலை 11 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கியதும், இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் மூன்று தலைவர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த மாதம் நடந்த மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனா, அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 12 நாட்கள் கழித்து பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றிக் கொண்டனர்.
தானேவைச் சேந்த மராட்டிய தலைவரான ஏக்நாத் ஷிண்டே கடந்த 2022 ஜூன் மாதத்தில், அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். இதனால் சிவசேனா இரண்டாக பிளவுபட்டது. தொடர்ந்து தாக்கரே தலைமை தாங்கிய மகா விகாஸ் அகாதி அரசு கவிழ்வதற்கும் வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து பாஜகவின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மாநில முதல்வரானார். ஃபட்னாவிஸ் துணை முதல்வரானார்., பின்பு இந்தக் கூட்டணியில் 2023 ஜூலையில் அஜித் பவாரும் இணைந்து கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசில், துணை முதல்வர் பதவியை ஏற்க ஏக்நாத் ஷிண்டே தயக்கம் காட்டியதாவும், சிவசேனா தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி அந்தப் பொறுப்பை ஏற்கவைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், மாநில காவல் துறையைக் கட்டுப்படுத்தும் உள்துறையை பெறுவதில் ஏக்நாத் ஷிண்டே உறுதியாக இருக்கிறாராம்.