இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்ட இந்திய வானிலை மையத்தின் அறிக்கையில், “தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட 31 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்யலாம்” என்று கூறப்பட்டிருந்தது.
அதுப்போலவே, ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தப் பிறகு கூட, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே தான் இருந்தது. வெள்ளம் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாத திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. திருவண்ணாமலையில் நிலச்சரிவு கூட ஏற்பட்டது.
இன்று (டிச.7) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வரும் டிச.11-ம் தேதி இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணித்துள்ளது. ஆக, இதனால் தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை, தமிழ்நாட்டில்ல் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
டிசம்பர் 11-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யலாம்.
அடுத்த நாளான, டிசம்பர் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழ்மை வரை மேகமூட்டமாக இருக்கும் மற்றும் சில நாட்களில் மழை பெய்யலாம். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.