Relationship: அம்மா மேல பாசமா இருக்கிற பசங்க பொண்டாட்டி மேலேயும் பாசமா இருப்பாங்களா?

‘அம்மா மேல பாசமா இருக்கிற பசங்க பொண்டாட்டி மேலேயும் பாசமா இருப்பாங்க’ – காலங்காலமாக வீட்டுப் பெரியவர்களால் இளம்பெண்களின் மனதில் விதைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது? சொல்கிறார் உளவியல் ஆலோசகர் டி. சந்தோஷ்.

“இங்கே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது ஆண்கள் தங்கள் அம்மாக்கள் மீது அன்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியென்றால், நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது ஆண்கள் மனைவி மீதும் அன்பாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தமாகிறது. அப்படி அன்பாக இருந்தால், இங்கே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது மனைவிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமல்லவா? அப்படி இருக்கிறார்களா என்ற கேள்விக்கு மற்றவர்கள் என்ன பதில் சொல்வார்களோ, அதே பதில்தான் அந்த வரிகளுக்கான என்னுடைய பதிலும்.

Relationship

பெரும்பாலான பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துவிட்ட இந்தக் காலத்திலும், என்னிடம் கவுன்சிலிங் வருகிற பெண்கள் ‘அம்மா மேல அவ்ளோ பாசமா இருக்கார். ஆனா, என்கிட்ட அப்படி இல்லையே ஏன்’ என்று கேட்கிறார்கள். ’அம்மா மேல பாசமா இருக்கிற பசங்க பொண்டாட்டி மேலேயும் பாசமா இருப்பாங்க’ என்கிற வரிகளை நம்பிய பெண்கள் அவர்கள். நிஜம் அப்படியில்லாததால் மனஅழுத்தத்துடன் உளவியல் ஆலோசகரை நாடி வந்தவர்கள்.

ஒரு கேஸ் ஹிஸ்டரி. அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. அவருடைய கணவர், அம்மா மீது மிகவும் பாசமாக இருக்கிற மகன். இத்தனை வருடங்களில் நான் ஒருநாளும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று அழுதார் அந்தப் பெண். காரணம், தாம்பத்திய உறவைக்கூட அம்மா சொல்கிற நாள்களில்தான் வைத்துக்கொண்டிருக்கிறார் கணவர். அம்மா எது சொன்னாலும் என் நன்மைக்குத்தான் சொல்வார் என்கிற கண்மூடித்தனமான அன்புதான் இதற்குக் காரணம். அம்மாவின் மீது இருக்கிற அன்பு, மனைவியை ஓர் உளவியல் நிபுணரிடம் ஒன்றரை மணி நேரம் அழ வைக்கிறது என்றால், அந்த நபர் தன்னை நம்பி வந்த பெண்ணை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்.

Relationship

நம் சமூகத்தில், பெற்றோர்கள் தங்கள் கடமையை முடிப்பதற்காகப் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். பிள்ளைகளோ குடும்பத்துக்காகத் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதனுடைய நீட்சியாக அம்மா செய்வது தவறு என்று தெரிந்தாலும், ‘அவர்கள் என்ன சொல்வார்களோ, இவர்கள் என்ன சொல்வார்களோ’ என்று சமூகத்தின் மீதான பயத்தில் மனைவியைத்தான் சகித்துக்கொள்ள வைக்கிறார்கள் ஆண்கள். விதிவிலக்கு ஆண்கள் மன்னிக்கவும். பெரும்பான்மை குடும்பங்களில் இந்தக்காலம் வரைக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

இங்கு எல்லா உறவுச்சிக்கல்களுக்கும் தீர்வு இருக்கிறது. அதேபோல் இதற்கும் தீர்வுகள் இருக்கின்றன. குடும்பத்துக்காகவோ சமூகத்துக்காகவோ திருமணம் செய்யாதீர்கள். திருமணம் என் வாழ்க்கையின் அடுத்தகட்டம். மனைவி என்கிற புது உறவுடன் சேர்ந்து வாழ்க்கையை எப்படி அழகாக்குவது என்று யோசியுங்கள். மனைவி என்பவள் உங்கள் குடும்பத்தினரை அனுசரிப்பதற்காகவே உங்களுடன் வாழ வந்திருக்கிறாள் என்று முன் முடிவெடுக்காதீர்கள். அம்மா செய்தாலும் தவறு, மனைவி செய்தாலும் தவறு என்கிற நடுநிலை மனப்பான்மையுடன் இருங்கள். மனைவி உங்களுக்குச் சமமானவர் மட்டுமல்ல, உங்கள் அம்மாவைப்போல அவரும் மனுஷிதான் என்பதை உணருங்கள். ஓர் ஆணின் வாழ்க்கையில் மகன், கணவன், அப்பா எனப் பல ரோல்கள் இருக்கின்றன. காலம் முழுக்க மகனாக மட்டுமே வாழ முடியாது என்கிற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

Relationship

சில வருடங்களுக்கு முன்பு ’சூரரைப் போற்று’ படத்தின் நாயகி பொம்மி போல மனைவி கிடைக்க வேண்டும் என்று சமூகவலைத்தளமெங்கும் ஆண்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். மனைவியை தன்னைப்போலவே நேசிக்கிற, மதிக்கிற ஆணுக்குத்தான் அந்த நாயகி கேரக்டர் சரியான துணையாக இருப்பார். திருமணத்துக்கு முன்பே ‘எனக்கு மனைவியா வர்றவ என் குடும்பத்தை அனுசரிச்சு நடக்கணும்’ என்று கண்டிஷன் போடுகிற ஆண்களுக்கு பொம்மியே மனைவியாகக் கிடைத்தாலும் அவளையும் சாதாரண பெண்ணாக்கி விடுவார்கள். அது வெறும் படம். என்றாலும் உங்களைப் பொறுத்துத்தான் உங்கள் மனைவியின் இயல்பு தீர்மானிக்கப்படும் என்பதற்கான நல்ல உதாரணம்.

ஆண்களுக்குக் கடைசியாக ஒரு பாயிண்ட். நல்ல மகனாக மட்டும் இருந்துகொண்டு மனைவியைத் தவிக்க விடுவது எவ்வளவு தவறோ, அதேபோல் நல்ல கணவனாக மட்டும் இருந்துகொண்டு அம்மாவை அலட்சியப்படுத்துவதும் தவறுதான்’’ என்றவர் பெண்களுக்கான தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

“அம்மா மீது பாசமாக இருக்கிற ஆண் மனைவி மீதும் பாசமாக இருப்பான் என்பது அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு வசனம் மட்டுமே. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அவர்களை வைத்து ஒட்டுமொத்த ஆண்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நம்பி திருமணம் என்ற பெரிய முடிவை எடுத்து விடாதீர்கள்.

relationship

மனைவி ரோலில் இருப்பவர்கள் வாழ்நாள் முழுக்க கணவனையும் கணவன் குடும்பத்தினரையும் சகித்துக்கொள்ளப் படைக்கப்பட்டவர்கள் அல்ல. அதனால், பிரச்னை என்று வரும்போது மனதுக்குள்ளேயே வைத்து குமைந்துகொண்டிருக்காதீர்கள். குமைந்தால் டிப்ரஷனும் ஆங்சைட்டியும்தான் வரும். அதனால், சரி, தவறுகளை வெளிப்படையாகப் பேசுங்கள். இதனால், உங்களுக்கு இன்னும் பிரச்னை அதிகமானால் உளவியல் நிபுணரிடம் ஆலோசனைக் கேளுங்கள். இன்றைக்கு உளவியல் நிபுணரைச் சந்திப்பது இயல்பான விஷயமாகிவிட்டது. உங்களுடைய பிரச்னைக்கு உங்களைக்கொண்டே தீர்வு காண வைக்க அவர்களால் முடியும். ஒருவேளை குடும்பப் பிரச்னையை உளவியல் நிபுணரிடம் ஏன் சொல்ல வேண்டும் என்று கணவர் எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் மட்டுமே உளவியல் நிபுணரைச் சந்தித்துத் தீர்வு பெறலாம். தனியாக வருகிற மனைவிகளுக்கு ஃபேமிலி கவுன்சலிங் வழங்க மாட்டோம் என்று எந்த சைக்காலஜிஸ்ட்டும் சொல்லப் போவதில்லை. திருமண வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவது சகஜம். ஆனால், கஷ்டங்கள் மட்டுமே இருந்தால், பெண்கள் பேசத்தான் வேண்டும்’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.