Family Padam Review: சுவாரஸ்யமான ஒன்லைன், ஜாலியான கதாபாத்திரங்கள்; காமெடியில் இறங்கி அடிக்கிறார்களா?

சென்னையைச் சேர்ந்த இளைஞரான தமிழ் (உதய் கார்த்திக்), சினிமா இயக்குநராகும் கனவோடு, சினிமா அலுவலகங்களுக்கு ஏறியிறங்கி வருகிறார். அவரின் முயற்சிகளுக்கு அவரின் தந்தை (சந்தோஷ் கேசவன்), தாய் (ஶ்ரீஜா ரவி), மூத்த அண்ணன் (விவேக் பிரசன்னா), இளைய அண்ணன் (பார்த்திபன் குமார்), தாத்தா (மோகன சுந்தரம்) என மொத்த குடும்பமும் ஆதரவாக இருக்கிறார்கள். அவரின் காதலியான யமுனாவும் (சுபிக்‌ஷா) தமிழின் கனவுக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கிறார்.

இந்நிலையில், பெரும் போராட்டத்திற்குப் பிறகு, தமிழின் கதைக்குப் பிரபல தயாரிப்பாளரும், பிரபல கதாநாயகனும் ஓகே சொல்கிறார்கள். ஆனால், அதில் ஒரு பிரச்னையும் சேர்ந்து வர, அது அவரையும், அவரின் மொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது. இப்பிரச்னையை அவரும் அவரின் குடும்பமும் எப்படிச் சமாளித்தார்கள், தமிழ் இயக்குநரானாரா, தமிழின் காதல் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் செல்வா குமார் திருமாறனின் ‘ஃபேமிலி படம்’ திரைப்படம்.

Family Padam Review

வைராக்கியம், நியாயமான கோபம், அளவான ஆக்ரோஷம், குடும்பத்தின் மீதான பாசம் எனத் துடிப்பான இளைஞராக தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் ‘டைனோசர்ஸ்’ உதய் கார்த்திக். ஆனால், தனியாளாக ஒரு காட்சியையும், அதன் உணர்வுகளையும் மெருகேற்றும் பணியில் பாதி கிணற்றையே தாண்டுகிறார். காமெடி, எமோஷன் என இரண்டு ஏரியாக்களிலும் தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் விவேக் பிரசன்னா. இளைய அண்ணனாகப் பார்த்திபன் குமார் எதார்த்தமான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார். ஶ்ரீஜா ரவி, சுபிக்‌ஷா, மோகன சுந்தரம், கவின் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்ய, சந்தோஷ் கேசவன், ஜனனி, பிரியங்கா ஆகியோர் வந்து போகிறார்கள்.

பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி, படத்திற்கு ரிச்னெஸ்ஸைக் கொடுத்திருக்கிறது மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு. ஆர். சுதர்சனின் படத்தொகுப்பு படத்திற்குத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறது என்றாலும், இரண்டாம் பாதியில் சிறிது நிதானத்தைச் சேர்த்திருக்கலாம். அனிவீ இசையில் ‘நெசமா’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. மேம்போக்கான காட்சிகளுக்கு ஆழம் சேர்க்க முயன்றிருக்கிறது அஜேஷ்ஷின் பின்னணி இசை.

Family Padam Review

தமிழ் மற்றும் அவருடைய குடும்பத்தின் பின்னணி, தமிழின் முயற்சிகள், அவற்றுக்கிடையில் வரும் பிரச்னைகள், காதல் போன்றவற்றைக் கொண்ட முதற்பாதி திரைக்கதை, சின்ன சின்ன காமெடி, லைட் வெயிட் காதல் காட்சிகள், குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான பாசம் என நிதானமாகவே நகர்கிறது. அழுத்தமான காட்சிகள் இல்லாததும், வேகத்தடையான பாடல்களும் தொந்தரவு செய்தாலும், சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை. மாஸ் ஹீரோக்களின் சேட்டைகளை நையாண்டி செய்யும் காட்சிகளும், சினிமாவுலகிற்குள் இருக்கும் சுரண்டல்களைப் பேசும் காட்சிகளும் கவனிக்க வைக்கின்றன.

முதற்பாதியிலிருந்த நிதானமும், எதார்த்தமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். எதார்த்த மீட்டரில் ஓடிக்கொண்டிருந்த எல்லா கதாபாத்திரங்களும் அதிரடி திருப்பங்கள் எடுத்து, ஒரு கட்டத்தில் அதீத வசனங்கள் பேச ஆரம்பித்துவிடுகின்றன. ஒரு காட்சியில் எமோஷனலாகப் பேசுவது, அதே காட்சி முடியும்போது காமெடி செய்வது, மீண்டும் இன்னொரு காட்சியில் எமோஷனலாகப் பேசுவது, இப்படி ரிப்பீட் மோடில் காட்சிகள் நகர்வதால், இது ஸ்பூஃப் காமெடி படமா, இல்லை எமோஷனலான படமா என்ற குழப்பம் உண்டாகிறது.

Family Padam Review

காமெடியில் இறங்கி விளையாட வேண்டிய தருணங்களும், அதற்கேற்ற கதாபாத்திரங்களும் இருந்தும், லோ வோல்டேஜ்ஜிலேயே எரிகின்றன காமெடி காட்சிகள். மேலும், தமிழ் என்ன கதையைத் தயாரிப்பாளரிடமும் ஹீரோவிடமும் சொன்னார், அந்தக் கதை ஏன் தமிழுக்கு நெருக்கமான கதையாக இருக்கிறது, இரண்டாவதாகத் தமிழ் எடுக்க முயலும் படத்தின் கதை என்ன போன்ற முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை என்பதால் கதாநாயகனின் போராட்டத்தில் நம்மால் பங்குகொள்ள முடியாமல் போகிறது.

சுவாரஸ்யமும் எதார்த்தமும் நிறைந்த கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் அமைத்த விதத்தில் மட்டுமே வெற்றியடைவதால், இந்த ‘ஃபேமிலி படம்’ ஃபுல் ஃபேமிலி மீல்ஸ் சாப்பிட்ட உணர்வைத் தர மறுக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.