India National Cricket Team: இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடந்த பகலிரவு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா இதுவரை தோல்வியே கண்டதில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவை அங்கு வீழ்த்த முடியும் என பெரும் நம்பிக்கையுடன் இந்திய அணி களம் கண்டது. ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரவிசந்திரன் அஸ்வின் என அனுபவ வீரர்கள் உள்ளே வருவதால் இரண்டாவது போட்டியில் பலமிக்கதாக காட்சியளித்தது.
ஆனால் நடந்ததோ வேறு… வழக்கம்போல் பேட்டிங்கில் 180 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. இதற்கடுத்து பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் சற்று சொதப்ப ஆஸ்திரேலியா 337 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140, மார்னஸ் லபுஷேன் 64, நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்களை எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு 157 ரன்கள் முன்னிலை கிடைத்ததுடன் இந்தியா பேட்டிங் செய்ய வந்தது.
இந்திய அணி செய்ய வேண்டியது என்ன?
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 128 ரன்களை எடுத்திருக்கும் நிலையில், ஜெய்ஸ்வால், ராகுல், விராட் கோலி, சுப்மன் கில், ரோஹித் சர்மா என 5 விக்கெட்டுகளை இழந்து, இந்தியா தற்போது பெரிய தடுமாற்றத்தில் இருக்கிறது. இருப்பினும், ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும், நிதிஷ்குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் அதிரடி பாணி ஆட்டக்காரர்கள் வேறு. இந்திய அணி தற்போது 29 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா ஆதிக்கத்தோடு இருந்தாலும் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு இன்னும் 30% அளவுக்கு இருக்கிறது என சொல்லலாம். இன்றைக்கு ஆஸ்திரேலிய அணி சுமார் 250 ரன்களுக்கு மேல் குவித்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதேபோல், இந்திய அணி தற்போது கையில் இருக்கும் 5 விக்கெட்டுகளை இறுக்கமாக பிடித்து 250 ரன்களை நாளைய முதல் இரண்டு செஷன்களுக்குள் அடித்தாலே போதும். ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் தவிர்த்து அஸ்வின், ஹர்ஷித் ராணா, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களே இருப்பதால் இந்திய அணிக்கு அது அவ்வளவு எளிதாக இருக்காது.
கைக்கொடுக்குமா ரிஷப் – ரெட்டி கூட்டணி?
எனவே, தற்போதைய பின்னிலையை தாண்டி மேலும் 200 ரன்களுக்கும் மேல் அடித்தால்தான் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு ஓரளவு ஏற்படும். ஏனென்றால் நாளைக்கு இரண்டாவது செஷனில் ஆஸ்திரேலியா பேட்டிங் வந்தால் இந்திய அணியால் சடாரென விக்கெட்டுகளை கவிழ்க்க முடியும். எனவே, குறைந்தபட்சம் 200 ரன்களையாவது ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்காக நிர்ணயிக்க வேண்டும். நாளை முதல் செஷனில் பந்து சற்றே சீம், ஸ்விங் ஆகலாம். அதை சமாளிக்கவும் இருவர் கைத்தேர்ந்திருக்க வேண்டும்.
அதற்கு நாளைய முதல் செஷனிலேயே ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி விக்கெட்டுகளை இழக்காமல் 120-140 ரன்களை குவித்தாலே பாதி வெற்றி உறுதியாகிவிடும். அடுத்த செஷனில் இன்னும் 80-100 ரன்களை எடுத்துவிட்டு, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய வரவழைக்கலாம். இதுதான் நாளைய இந்திய அணியின் திட்டமாக இருக்க வேண்டும். காரணம், எப்போதும் வேண்டுமானாலும் விக்கெட்டுகள் சரியலாம். எனவே, ரிஷப் மற்றும் ரெட்டி கூட்டணி டிராவிஸ் ஹெட் செய்ததை ஆளுக்கு ஒரு வேலையாக பகிர்ந்துகொண்டு செய்துவிட்டால் இந்திய அணியின் தலைவலி நீங்கிவிடும்.
அனைத்தும் பந்துவீச்சாளர்கள் கையில்…
அஸ்வின் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களை பங்களிப்பார்கள் எனும்பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். அடுத்து எல்லாம் பந்துவீச்சாளர்களின் கையில்தான் இருக்கிறது. நான்காவது இன்னிங்ஸ் என்பதால் ஆடுகளமும் கைக்கொடுக்கலாம், பும்ரா, அஸ்வின் அதிக விக்கெட்டுகளை சாய்ப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்திய அணி வெற்றி பெற இது ஒன்றே வழி.