விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த சில வருடங்களாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்காக சரியான கவனம் செலுத்தப்படவில்லை.
எமது நாட்டின் இயற்கை வளங்களின் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றின் ஊடாக இலாபம் ஈட்ட முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு எதிர்காலத்தில் அது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
“விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திற்கு நாம் மிகக் குறைந்த அளவே செலவிடுகிறோம். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியம் என கடந்த அரசாங்கத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
எமது தலா தேசிய உற்பத்தியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திற்கு நூற்றுக்கு 0.12 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகில் ஏனைய நாடுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டின் இயற்கை வளங்களினால் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யலாம். அவற்றிலிருந்து வருமானம் பெறவும் முடியும். ஏப்பாவெல பொஸ்பேட் இதற்கு சிறந்த உதாரணமாகும். அதிலிருந்து மூன்று மடங்கு போஸ்பேட் தயாரிக்கலாம்” என அமைச்சர் மேலும் விவரித்தார்.