”சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து சரியாக முதலீடு செய்வதும், நீண்டகாலத்துக்கு முதலீட்டைத் தொடர்ந்து வருவதும்தான் மியூச் சுவல் ஃபண்டில் சிறப் பான வருமானம் கிடைப்பதற்கான சூட்சுமம்..!”
கடந்த நவம்பர் 30-ம் தேதி ஓசூரிலும், டிசம்பர் 1-ம் தேதி சேலத்திலும் நாணயம் விகடன் மற்றும் ஆம்ஃபி அமைப்பு இணைந்து ‘முதலீடுகளும் நீங்களும்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதிப் பயிற்சியாளர் மணிராம், மேற்குறிப்பிட்டுள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் சூட்சுமத்தைக் கூறினார்.
‘‘இந்தச் சூட்சுமத்தை அறிந்தவர்கள்தான் கோடீஸ்வரர் ஆகிறார்கள்’’ என்று குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில், ‘‘வைகைப்புயல் வடிவேலுவின் ‘எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணணும்’ என்கிற வசனம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். அதுபோல தான் முதலீட்டை மேற்கொள்ளும்போதும் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். நமக்கான இலக்கை முதலில் தீர்மானிக்க வேண்டும். அந்த இலக்கு குழந்தைகளின் திருமணம், குழந்தைகளின் கல்வி, சொந்த வீடு, கார், வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கைப் பொறுத்துதான் நீண்ட கால சேமிப்புத் திட்டமா அல்லது குறுகிய கால சேமிப்புத் திட்டமா என்று முடிவெடுக்க முடியும்.
அப்படி முடிவெடுத்த பிறகு, சம்பளத்தில் இருந்து முதலீட்டுக்காக ஒரு பகுதியை ஒதுக்கி அந்தப் பணத்தை இலக்கு அடிப்படையில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
இன்றைய நிலையில் பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் திட்டங்களை முதலீடாகப் பார்க்கிறார்கள். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் சொத்துக் காப்பீடு இவற்றை யெல்லாம் முதலீடு என்ற பார்வையில் பார்க்காதீர்கள்” என்றார்.
நிதி நிபுணர் வ.நாகப்பன் பேசும்போது, “மியூச்சுவல் ஃபண்டில் நேரடியாக முதலீடு செய்யலாமா என்று சிலர் கேட்கிறார்கள். நேரம், பணம் மற்றும் பக்குவம் இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் நேரடி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்த மூன்றில் ஏதாவது, ஒன்று இல்லை என்றாலும் விநியோகஸ்தரின் கமிஷன் தொகையைப் பெரிதாகப் பார்க்காமல், அவர் களின் மூலமாக முதலீடு செய்வதே நல்லது. அப்போதுதான் இலக்கு அடிப்படையிலான முதலீட்டை இடையில் தடைபடாமல் நீண்டகாலம் தொடர முடியும்” என்றார்.
நிதி நிபுணர் ஏ.கே.நாராயண் பேசும்போது, “இன்றைய நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி நன்றாகவே இருக்கிறது. முதலிடத்தில் அமெரிக்கா, இரண்டாம் இடத்தில் சீனா, மூன்றாம் இடத்தில் இந்தியா என்கிற நிலை இனி தொடரும் என்றே நான் நினைக்கிறேன்.
பங்குச் சந்தையின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, அது கடந்து வந்திருக்கும் பாதை அசாத்தியமானது. எதிர்கால வளர்ச்சியும் அப்படியேதான் இருக்கப்போகிறது. அந்த வளர்ச்சிப் பாதையில் சரியான முதலீட்டின் மூலம் நீங்கள் உங்களை யும் இணைத்துக்கொள்ளப் போகிறீர்களா இல்லையா என்பதுதான் உங்கள் முன் இருக்கும் கேள்வி” என்றார்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பிறகு, அது தரும் லாபத்தை மட்டும் அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாமா? என்கிற கேள்வியை அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நாணயம் விகடன் வாசகி ஒருவர் கேட்க, “மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் லாபத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அது உங்களுடைய பணம். ஆனால், எந்த இலக்குக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பித்தீர்களோ அந்த இலக்கு பூர்த்தியாகும் வரை அந்த முதலீட்டில் கைவைக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.
ஏனெனில், ஒரு மரத்தை நட்டு வைத்துவிட்டு அந்த மரம் வளர வளர வெட்டிக்கொண்டு வந்தால் என்ன ஆகுமோ, அதே நிலைதான் உங்களுடைய மியூச்சுவல் ஃபண்டுக்கும். மரம் வேகமாக வளர்வது தடைபடுவது போல, நம்முடைய இலக்கை அடைவதும் தடைபடும்” என நிதி நிபுணர் வ.நாகப்பன் பதிலளித்தார்.