விழுப்புரம்/ புதுச்சேரி: தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கடலூர், புதுச்சேரியில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து, கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், பொது மக்களின் உடமைகள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. புதுச்சேரியிலும் நகர பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களும் வெள்ளக்காடாகின.
தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழுவை அனுப்புமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.
7 பேர் கொண்ட குழு: இதைத் தொடர்ந்து, தமிழ கம், புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
வேளாண் துறையின் எண்ணெய் வித்துக்கள் வளர்ச்சி பிரிவு இயக்குநர் பொன்னுசாமி, நிதித்துறையின் செலவின பிரிவு இயக்குநர் சோனாமணி ஹோபம், நீர்வளத்துறை இயக்குநர் சரவணன், நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் தனபாலன் குமரன், எரிசக்தி துறை உதவி இயக்குநர் ராகுல் பச்சேத்தி, ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குநர் கே.எம்.பாலாஜி ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக முதல்வருடன் சந்திப்பு: கடந்த 6-ம் தேதி மாலை சென்னை வந்த மத்திய குழுவினர், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, தற்காலிக, நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்குமாறு மத்திய குழு தலைவரிடம் ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்தார்.
இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோரும் உடன் சென்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டிடத்தையும், அங்கு வைக்கப்பட்டு சேதமடைந்திருந்த விளைபொருட்களை யும் பார்வையிட்டனர். அய்யங்கோயில்பட்டு அருகே சேதமடைந்த பம்பை ஆற்றை பார்வையிட்டனர்.
பிறகு, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, சேத விவரங்களை கேட்டறிந்தனர்.
பின்னர், குழு தலைவர் ராஜேஷ் குப்தா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் இருவேல்பட்டு, அரசூர், திருவெண்ணெய்நல்லூர், சிறுமதுரை, கூரானூர் கிராமங்களிலும், வேளாண் துறை இயக்குநர் பொன்னுசாமி தலைமையில் 4 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், வயலாமூர், சென்னகுணம், கருங்காலிப்பட்டு, ஆயந்தூர், நெற்குணம், அரகண்டநல்லூரிலும் ஆய்வு செய்தனர்.
பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். திருக்கோவிலூர் நகராட்சி கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாவட்டத்தில் பொதுவாக ஏற்பட்ட சேதங்கள், குறிப்பாக எந்தெந்த விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆறுகளின் கரையோரம் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
விவசாயிகள் முறையீடு: தொடர்ந்து ஆவியூர் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சேத விவரங்களை கேட்டறிந்தனர். தமிழக நெடுஞ்சாலை, நீர்வளம், வேளாண்மை ஆகிய துறைகளின் அதிகாரிகள் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் விளக்கம் அளித்தனர். விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினரிடம் காண்பித்து முறையிட்டனர். பின்னர், மத்திய குழுவினர் நெய்வேலிக்கு புறப்பட்டு சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு, புதுச்சேரி செல்கின்றனர். 2 குழுக்களாக சென்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி நகர் மற்றும் கிராமப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். புதுச்சேரி, உழவர்கரை வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றும், வில்லியனூர், பாகூர் கொம்யூன் பகுதிகளில் நாளையும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோரை சந்திக்க மத்திய குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் மத்திய அரசிடம் இக்குழுவினர் வழங்குவார்கள் என தெரிகிறது.