புதுடெல்லி: வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்களை வரும் 12-ம் தேதி சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் கடந்த 1991-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், “அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சமான நீதித் துறை மறுபரிசீலனையின் தீர்வை இந்த சட்டம் தடுக்கிறது. மதச்சார்பின்மை கொள்கையை மீறுகிறது” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 2021-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு மத்திய அரசு அடுத்தடுத்து கூடுதல் அவகாசம் கேட்டதால் இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்களை வரும் 12-ம் தேதி சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான இந்த சிறப்பு அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.