ஊட்டி நகராட்சி ஆணையராக ஜஹாங்கீர் பாஷா…
ஊட்டி நகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் நகராட்சி விதிமுறைகளை பின்பற்றாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்மூடித்தனமாக கட்டுமானங்களை கட்ட அனுமதி வழங்கியதாகவும், அதனால் ஊட்டியில் தனியார் கட்டுமானங்கள் அதிகம் வந்ததாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது. மக்கள் மத்தியிலும், சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி எழுந்தது. இதனால், லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்கொத்தி பாம்பாக இவரை கண்காணித்து வந்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை…
கடந்த மாதம் பணி முடித்துக் கொண்டு வார விடுமுறைக்காக வாடகை காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை தொட்டபெட்டா வரை விரட்டிச் சென்று காரை சோதனை செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.
காருக்குள் கட்டுக்கட்டாக இருந்த சுமார் 11 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த ரொக்கப் பணத்திற்கான முறையான ஆவணங்களோ பதிலோ அளிக்கப்பட்டாத நிலையில், ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டது. ஊட்டி நகராட்சி ஆணையர் பதவி பறிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக…
இந்நிலையில், திடீரென பதவி உயர்வு வழங்கப்பட்டதைப் போல நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் பதவியை ஜஹாங்கீர் பாஷாவிற்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த செயல் ஊழல் அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறி கடுமையான எதிர்ப்புகள் வலுத்தன. மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியது. இந்நிலையில், நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் பதவியிலிருந்து ஜஹாங்கீர் பாஷாவை சஸ்பெண்ட் செய்வதாக நகராட்சி ஆணையர் திடீரென நேற்று திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன் பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த அனைத்து நகராட்சிகளுக்கான மண்டல அதிகாரி ஒருவர், ” திருவேற்காடு தேனி உள்ளிட்ட பகுதிகளில் பணியில் இருந்த போதும் இவர்மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் எழுந்திருக்கிறது. அதனால் தான் ஊட்டிக்கு தூக்கி அடித்தார்கள். ஆனால், அங்குள்ள கட்டுப்பாடுகளை மீறுவதை தொழிலாகக் கொண்டு விதிமீறல் அனுமதிகளை வழங்கி வந்தார். பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவியும் பறிக்கப்பட்டது. ஆனால், தலைமை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை சென்று சந்தித்து காரியம் சாதித்துக் கொண்டார்.
சஸ்பெண்ட்..
அந்த செல்வாக்கின் மூலம் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் பதவி கிடைத்தது. ஆனால், இந்த விவகாரம் தலைமைச் செயலகம் வரை விவாவத்ததை கிளப்பியது. இந்த முடிவு அரசுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் விவாதம் சென்றது. வேறு வழியின்றி அவரை சஸ்பெண்டு செய்ய தலைமையில் இருந்து உத்தரவு சென்று நிலையில், தற்போது ஜஹாங்கிர் பாஷாவை சஸ்பெண்ட் செய்துள்ளனர் ” என்றார்.