விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை சென்னை புழல் பகுதியில் தனியார் கிளப் ஒன்றைத் திறந்து வைத்தார்.
நீச்சல் குளம், டென்னின்ஸ் கோர்ட் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களுடன் மது அருந்த பார் ஆகிய பல்வேறு வசதிகளுடன் கூடிய அந்த கிளப்-ஐ திறந்து வைத்தார் திருமாவளவன். இந்த கிளப் வி.கே. சசிகலாவின் உறவினரான பாஸ்கரனுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. சென்னை புழல ஜெயிலுக்கு எதிரே சில கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இந்த கிளப்பிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அருகருகே பழைமையான சிவன் கோவிலும் தனியார் பள்ளியும் இருக்கிறது.
.
இந்த கிளப்பை திருமா திறந்து வைக்க ஒப்புக் கொண்டது, அவரது சொந்தக் கட்சியினரிடையே கூட அதிருப்தியை உண்டாக்கியதாகச் சொல்கிறார்கள். சில உள்ளூர் விசிகவினர் இதுகுறித்து நம்மிடம் பேசிய போது,
“ஏற்கனவே இப்ப கட்சிக்கு நேரம் சரியில்லாம இருக்குனு தோணுது. கூட்டணிக் கட்சிகளுடன் உறவில் சிக்கல், சொந்தக் கட்சியினரிடையே சில கருத்து வேறுபாடுகள் எல்லாம் போயிட்டு இருக்கு. இந்தச் சூழல்ல பார் இருக்கும் க்ளப் திறப்பு விழாவுக்கு இவரை யார் எப்படிச் சம்மதிக்க வச்சாங்கனுதான் தெரியலை.
அதுவும் கடந்த அக்டோபர் மாதம் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய நிலையில் இப்போது இப்படியொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் எப்படிச் சம்மதித்தார்னுதான் எங்களுக்கே ஆச்சரியமாகவும் இருக்கு, அதிர்ச்சியாகவும் இருக்கு. பார் வசதியுடன் கூடிய க்ளப் என தெரியாமல் திறப்பு விழாவுக்கு வந்துவிட்டதாக சொல்வார்களேயானால், முன்னதாக எங்களிடம் கேட்டு இருந்தால் இதனை சொல்லி தடுத்திருப்போம். இப்போது இது எங்களுக்கு கட்சிக்கும் அவப்பெயர் தான்” என்றனர்.
விசிக தரப்பில் இருந்து இது குறித்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை. அப்படி தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்கு பின்னர் அதனை பதிவிடவும் தயாராக உள்ளோம்.!