India National Cricket Team: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் (ICC World Test Championship Ranking) ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு தற்போது முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கும், இந்திய அணி மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது. இதன்மூலம், பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு (Team India) பல்வேறு சவால்களை கொண்டுவந்தது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணிக்கு அனுபவம் மிகக் குறைவு. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணி (Team Australia) இதுவரை அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் தோற்றதே இல்லை. அந்த பெருமை இந்த போட்டியிலும் தொடர்ந்துள்ளது.
இந்திய அணி படுதோல்வி
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களை குவித்தது. இதன்மூலம், இந்திய அணி 157 ரன்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. நேற்றே 5 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் பின்னிலையுடன் இருந்த இந்திய அணிக்கு இன்று ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை மெக்ஸ்வீனி மற்றும் கவாஜா ஆகியோரே அடித்துவிட 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
140 ரன்களை அடித்த டிராவிஸ் ஹெட் (Travis Head) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், இதுதான் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே குறைவான பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டி இதுதான். கடந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி அடிலெய்டில் 36 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியதோ அதே அளவிற்கு இந்த டெஸ்ட் போட்டியும் பெரும் தாக்கத்தை செயல்படுத்தும். அடுத்து, வரும் டிச. 14ஆம் தேதி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் 3வது போட்டியும், டிச. 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் 4வது போட்டியும், ஜன. 3ஆம் தேதி சிட்னியிலும் தொடங்குகின்றன. இந்திய அணி WTC பைனலுக்கு தகுதிபெற அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்
ஒரு போட்டியில் தோற்றால் கூட, இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும். எனவே, அடுத்தடுத்த போட்டியில் இந்திய அணி சூழலுக்கு தகுந்தவாறு சில மாற்றங்களை (Team India Changes) மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணியின் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சும் சொதப்பியது. வேகப்பந்துவீச்சில் ஹர்ஷித் ராணாவுக்கு பதில் ஆகாஷ் தீப்பை முயற்சிக்க வேண்டும் என குரல்கள் எழத்தொடங்கிவிட்டன. அதேபோல், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாவையும் அணிக்குள் கொண்டுவர வேண்டும் எனவும், ரோஹித் சர்மா மீண்டும் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும் எனவும் மூத்த வீரர் ரவி சாஸ்திரி வர்ணனையில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஒருவேளை ஜடேஜாவை உள்ளே கொண்டுவந்தால் அஸ்வினை விடுவிக்க வேண்டும். அஸ்வினை விடுவிக்கும்பட்சத்தில் அணியில் ஆப் ஸிபின்னர் இல்லாமல் போய்விடும். நிதிஷ்குமார் ரெட்டியும் சிறப்பாக விளையாடுவதால் அவரிடத்திலும் கைவைக்க முடிகிறது. காபா மைதானத்திலும் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்குவதுதான் வியூகமாக இருக்கும். அதில் வாஷியோ, அஸ்வினா, ஜடேஜாவா யார் அந்த இடத்தை கைப்பற்றப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.