டெல்லியை நோக்கி பேரணி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு

புதுடெல்லி,

கடந்த 2020ல் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021ல் 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது.

எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். டெல்லியிலே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் டெல்லி செல்ல முற்பட்ட அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்போது நடந்த போராட்டத்தில் போலீசார் தாக்கியதில் விவசாயிகள் சிலர் காயமடைந்தனர்.

டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பேரணி செல்ல இருந்தனர். விவசாயிகள் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஷம்பு எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டு, விவாசாயிகளின் வாகனங்கள் கடக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அங்கு போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அரியானா, பஞ்சாப் எல்லைகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரியானா மற்றும் பஞ்சாப் இடையேயான ஷம்பு எல்லையில் டெல்லியை நோக்கிச் செல்வதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களை கலைத்து வருவதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து தப்பும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.