மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்காக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த சட்டப்பேரவையிலும் நர்வேகரே சபாநாயகராக இருந்தார்.
நர்வேகர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் மாநில பாஜக தலைவர் சந்திரசேகர பவன்குலே, மூத்த பாஜக தலைவர் சந்திரகாந்த் பாடீல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு திங்கள்கிழமை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், கோலாபா தொகுதி எம்எல்ஏ ராகுல் நர்வேகர் போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
துணை சபாநாயகர் பதவிக்காக முதல்வரைச் சந்தித்த எம்விஏ தலைவர்கள்: இதனிடையே, நர்வேகரின் வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரி, மகாவிகாஸ் அகாடி கூட்டணித் தலைவர்கள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.
அவர்கள் முதல்வர் ஃபட்னாவிஸிடம், “எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவை சபாநாயகரை போட்டியின்றித் தேர்வுசெய்ய எதிர்க்கட்சிகள் அனுமதிக்கும். ஆனால், ஆளுங்கட்சி மரபுகளைப் பின்பற்றி துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்தனர்.
முதல்வரைச் சந்தித்த சிவசேனா (உத்தவ் அணி), காங்கிரஸ், என்சிபி (எஸ்பி) அங்கிய மகா விகாஸ் அகாதி குழுவுக்கு சிவசேனாவைச் சேர்ந்த பாஸ்கர் ஜாதேவ் தலைமை வகித்தார்.
முதல்வருடனான சந்திப்புக்கு பின்பு, சட்டப்பேரவையில் கூட்டணியின் செயல்பாடுக்கான அடிப்படைகளை வகுப்பது குறித்து விவாதிக்க மகாவிகாஸ் அகாடி கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடந்தது.