தற்போது நல்ல பார்மில் இருப்பதாக உணர்கிறேன் – ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட்

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மீண்டும் ரன்கள் குவித்தது நன்றாக இருக்கிறது. கடந்த வாரத்திலிருந்து நாங்கள் தற்போது சிறந்த நிலைக்கு வந்தோம். தற்போது நல்ல பார்மில் இருப்பதாக உணர்கிறேன். எங்களுடைய அணியும் நன்றாக இருக்கிறது. எதுவும் கேரண்டியாக இருக்க முடியாது. ஆனால் எங்களுக்கு நல்ல வேகம் கிடைத்துள்ளது. அதே வேகத்துடன் நாங்கள் இத்தொடரில் முன்னோக்கி செல்ல வேண்டும்.

இரண்டாவது புதிய பந்தில் ரிஸ்க் எடுத்து விளையாடுவதற்கு நல்ல வாய்ப்பு இருந்ததாக நான் கருதினேன். அது நன்றாக வேலையும் செய்தது. சதம் அடித்த போது அப்படி கொண்டாடியது புதிதாக பிறந்த என்னுடைய மகனுக்கானது. அதே போல மில்லருக்கும் (முதல் மகன்) செய்தேன். எனது குடும்பம் இங்கே இருந்தது மிகவும் நன்றாக இருந்தது. இந்த வாரம் நன்றாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.