புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 519 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மாலா ராய் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கீர்த்தி ஆசாத் எழுத்து மூலம் அளித்த பதில்:
கடந்த 2023 நவம்பர் முதல் 2024 அக்டோபர் வரையிலான காலத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக 519 இந்தியர்கள் தங்கியிருந்தனர். இதுதொடர்பாக அமெரிக்க அரசு விசாரணை நடத்தி, அவர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.
வர்த்தக விமானங்கள் மூலமாகவும், வாடகை விமானங்கள் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
சட்டவிரோதமாக தங்கியிருந்தது, போதிய ஆவணங்கள் அவர்கள் வசம் இல்லாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கீர்த்தி ஆசாத் அதில் தெரிவித்துள்ளார்.