விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆஃப் காமன்ஸின் நிறுவனர். அந்நிறுவனமும், விகடன் பிரசுரமும் இணைந்து உருவாக்கிய ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றிருந்தார். அவ்விழாவில், ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை செல்லும் போது கூறியிருந்தார்.
இதுகுறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனா பேசியது முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட கருத்து. இதற்கும் வி.சி.க விற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிப்பட்டன.
இதற்கு விளக்கமளித்திருக்கும் திருமாவளவன், “விஜய் பங்கேற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்க அனுமதி அளித்ததே நான்தான். அப்புத்தகத்தின் உருவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவிற்குப் பங்கு இருக்கிறது. அதனால் அவரைப் பங்கேற்கச் சொன்னேன். அவரைப் போக வேண்டாம் என்று சொல்வது ஜனநாயகம் இல்லை.
விழா மேடையில் ‘கவனமாகப் பேசுங்கள்’ என்று அறிவுறுத்தியிருந்தேன். என்னுடைய அனுமதியில்லாமல் அவர் போகவில்லை. ஆதவ் அர்ஜுனா கட்சியில் பொறுப்பில் தான் இருக்கிறார், தொடர்பிலும் இருக்கிறார் ஒரு முறைக்கு இரு முறை பரிசீலித்த பிறகே ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.