லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த முஸ்லிம் தம்பதி இஜாசுல் -நிதா. சம்பல் வன்முறை தொடர்பான வீடியோவை பார்த்த நிதா கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் எடுத்த நடவடிக்கையை பாராட்டி பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் இஜாசுல் மூன்று முறை தலாக் சொல்லி நிதாவை விவாகரத்து செய்துள்ளார். இந்த செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரேபிய மொழியில் தலாக் என்றால் விவாகரத்து என்று அர்த்தம்.
இதுகுறித்து புர்கா அணிந்தபடி செய்தியாளர்களிடம் நிதா கூறியதாவது: சம்பல் நகரத்துக்கு கல்யாண நிகழ்வு மற்றும் சொந்த வேலைக்காக செல்ல வேண்டியிருந்தது. ஏற்கெனவே பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அங்கு செல்வது பாதுகாப்பானதாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்ள வீடியோ பார்த்தேன். அப்போது, என் கணவர் ஏன் அந்த வீடியோவை பார்க்கிறாய் என்று கூறி சண்டையிட தொடங்கினார். நீ முஸ்லிம் இல்லை, நீ ஒரு காஃபிர், போலீஸுக்கு ஆதரவாக பேசுகிறாய் என்று கூறி என்னிடம் மோசமாக நடந்து கொண்டார. மூன்று மூறை தலாக் கூறி உன்னை விவாகரத்து செய்துவிட்டேன், இனி உனக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்று வெளியில் துரத்திவிட்டார். இவ்வாறு செய்தியாளர்களிடம் நிதா தெரிவித்தார்.
இதுகுறித்து மொரதாபாத் நகர எஸ்பி ரான்விஜய் சிங் கூறுகையில், “ தன் கணவர் மீது நிதா புகார் அளித்துள்ளார். அதில், சம்பல் தொடர்பான வீடியோக்களை பார்க்ககூடாது என கணவர் கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. எனவே, இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
முஸ்லிம் ஆண்கள் “மூன்று முறை தலாக்” சொல்லி தனது மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. அத்துடன், இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் விளக்கம் அளித்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசும் இந்த நடைமுறையை தடைசெய்வது தொடர்பான சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.