கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 45’ படத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. ‘சூர்யா 45’ படத்தை S.R பிரவுவின் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் நேற்று படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே விஷ்ணு கமிட்டாகி இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இடம்பெறாததால் அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் ‘சூர்யா 45’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது. அதாவது ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் ‘சூர்யா 45’ படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இவர் ஏற்கனவே லோகேஷ் கனராஜ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் படத்துக்கும் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.