திருமலை: திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள கர்ப்பக் கிரகம் உட்பட தங்க விமான கோபுரத்தின் கீழே உள்ள சுவர்கள் முழுவதும் வேலூர் பொற்கோயில் போன்று தங்க தகடுகள் பொருத்த வேண்டும் என 2008-ல் அப்போதைய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவுலு நாயுடு விரும்பினார். இதற்கு அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இதற்காக பக்தர்களிடம் இருந்து தங்கத்தை நன்கொடையாக பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து அறிவிப்பு வந்ததும் பலர் கிலோ கணக்கில் தங்கத்தை ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக வழங்க தொடங்கினர். ஆந்திரா மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்க தொடங்கினர். இவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் கோடி கணக்கில் தங்கத்தை காணிக்கையாக வழங்கினர்.
இந்நிலையில், தங்கத்தகடுகளை சுவரில் பதிக்கும்போது அதில் துளைகள் போட வேண்டிவரும். அப்படி துளைகள் போட்டால் கர்ப்பக் கிரக சன்னதியில் சுற்றிலும் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அழிந்து போகும் அபாயம் ஏற்படும். மேலும் கர்ப்பக் கிரக சன்னதியும் பலவீனமடையும் என்பதால் இத்திட்டத்தை தேவஸ்தானம் கைவிட வேண்டும் என சில பக்தர்களால் வலியுறுத்தப்பட்டது. சில இடங்களில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் சிலர் இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இத்திட்டத்துக்கு நீதிமன்றமும் இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து, இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதற்குள் பல டன் தங்கம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு விட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பால், இத்திட்டத்தை கைவிட்ட தேவஸ்தானம், தங்கத்தை அந்தந்த பக்தர்களுக்கே திருப்பி தர முடிவு செய்து அறிவிப்பும் செய்தது. ஆனால், இதனை சிலர் வாங்க மறுத்து விட்டனர்.
அப்படி வாங்க மறுத்த சில பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானத்தினர் கடந்த 16 ஆண்டுகளாக எந்தவித சலுகைகளும் வழங்கவில்லை. ஆனால், தற்போது அறங்காவலர் குழு தலைவராக வந்துள்ள பி.ஆர்.நாயுடு, தற்போது பல புதிய சலுகைகளை இந்த நன்கொடையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, தங்கத்தை காணிக்கையாக வழங்கியவர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட உள்ளது. ஒரு ஆண்டில் 3 நாட்கள் வரை தங்குவதற்கு வசதியாக அவர்களுக்கு அறைகள் வழங்கப்படும். மேலும், 20 சிறிய லட்டு பிரசாதங்கள், ஜாக்கெட் துண்டு, ஆண்களுக்கு அங்க வஸ்திரம் போன்றவையும் வழங்கப்படும். மேலும் 5 கிராம் தங்க காசு, 50கிராம் வெள்ளி டாலர் போன்றவையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
25 ஆண்டுகள் வரை… இந்த சலுகைகள் நன்கொடையாளருக்கும், அவரது குடும்பத்தாரும் தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.