Aadhav Arjuna: `ஆதவ் கருத்து கட்சியின் நலன் எனத் தோன்றினாலும்..!’ – இடை நீக்கம் செய்த திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த 20 நாள்களில் கடந்த பிப்ரவரி மாதம் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றவர் ஆதவ் அர்ஜுனா.

‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons)’ எனும் தேர்தல் வியூக நிறுவனத்தின் மூலம் மாநாடுகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். 2021 தொடக்கத்திலிருந்து வி.சி.க-வின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து வந்த இவர், கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். இதையடுத்து 20 நாள்களில் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றார். கடந்த11 மாதங்களில் அதிரடியானக் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இது தி.மு.க – வி.சி.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக, சமீபத்தில் விஜய் பங்கேற்ற விகடனின் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது தமிழக அரசியலிலும், ‘தி.மு.க – வி.சி.க’ கட்சியினரிடையே பெரும் விவாவத்தைக் கிளப்பிவிட்டது.

இந்நிலையில் ‘வி.சி.க’விலிருந்து ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ‘வி.சி.க’ தலைவர் திருமாவளவன், “ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு:

1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை கவனத்துக்குத் தெரியவந்தது.

2. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

5.இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.” என்று கூறப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.