எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 25 தொடங்கியது. இதில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட மசோதாக்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக மத்திய அரசு திட்டமிட்டதாக சொல்லப்பட்டது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரம் குறித்து பரவலாக பேசத் தொடங்கினர். கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கிய நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று இரு அவைகளும் தொடங்கின.

இதற்கிடையே, காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவையில் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். மேலும், ஹங்கேரி – அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உடைய நிதி அளிக்கும் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியது. மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய அலுவல்கள்.. மீண்டும் அவை கூடும்போது மக்களவையில் ரயில்வே (திருத்தம்) மசோதா மீதான விவாதம் மீண்டும் தொடங்கும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா குறித்து தனது கருத்துக்களை முன்வைக்க உள்ளார். மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா குறித்து விவாதிக்க இருக்கிறார். மக்களவையில் இந்த மசோதா டிசம்பர் 5, 2024 அன்று நிறைவேற்றப்பட்டது.

5-வது நாளாக போராட்டம்.. அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘மோடியும் அதானியும் ஒன்றுதான்’ என்று இண்டியா கூட்டணி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “ஜார்ஜ் சோரோஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம். டிசம்பர் 13, 14 ஆம் தேதிகளில் மக்களவையிலும், டிசம்பர் 16, 17ம் தேதிகளில் மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தலாம் என்றும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளோம். நாட்டுக்கு எதிரான அமைப்புகளுடன் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருக்கும்பட்சத்தில், இந்தப் பிரச்னையில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.