சமூகத்தில் அடிக்கடி பேசப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருகோணமலை மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை மையமாக வைத்து, கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன என்று திருகோணமலை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் தெரு நாடகம் ஆகியவை 16 நாட்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியை திருகோணமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலகம் மற்றும்; பெண்கள் மற்றும் குழந்தைகள் பொலிஸ் நலப்பிரிவு இணைந்து ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட பெண்கள் மேம்பாட்டு அதிகாரி தீபானி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.