ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவரது மனைவி சுகன்யா. இத்தம்பதிக்கு 7வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைச்செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், சுகன்யா தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு மாதத்துக்கு முன்பாக தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, சுகன்யா தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி இருந்து சாயப்பட்டறை வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், திருமலைச்செல்வன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது, கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த திருமலைச்செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், சுகன்யாவும் மகள் ஒமிஷாவும் தப்பித்துவிட, 4 வயது சிறுவன் நிகில் மீது தீப்பற்றியுள்ளது.
பெட்ரோல் என்பதால் உடல் முழுவதும் தீ மளமளவென பற்றியது. வலியால் அலறித் துடித்த நிகிலை தாய் சுகன்யாவும் அவரது உறவினர்களும் காப்பாற்றியுள்ளனர். இருப்பினும், உடலில் 70 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் நிகில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகன்யா அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருமலைச்செல்வனை கைது செய்தனர். மது போதைக்கு அடிமையான தந்தை பெற்ற மகனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் ஈரோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.