புதுடெல்லி,
2025-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்னதாக ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆந்த்ரே ரசல், ஹர்ஷித் ராணா மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்திருந்தது. இதில் வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடி கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியது.
கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி விடுவித்தது. இதையடுத்து எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் அல்லது ரகானே ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம், ஐ.பி.எல் அணி, அல்லது இந்திய அணி என எந்த ஒரு அமைப்பிலும் நான் ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன் என வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் எப்போதுமே ஒரு தலைவனாக இருக்கவே விரும்புகிறேன். நீங்கள் என்னை எந்த அணியில் சேர்த்தாலும், அதன் தலைமை பொறுப்பு எனக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
மத்திய பிரதேச அணியாக இருந்தாலும் சரி, ஐ.பி.எல் அணியாக இருந்தாலும் சரி, இல்லை இந்திய கிரிக்கெட் அணியாக இருந்தாலும் சரி. நீங்கள் தலைவனாக இருக்கும்போது உங்களுடைய ஐடியாவை அறிவுரைகளை அணிக்கு சொல்லி வழி நடத்தலாம். இதற்கு கேப்டன் என்ற பதவி தேவையில்லை.ஆனால் எங்கள் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு தலைவராக இருக்க நான் எப்போதுமே விரும்புவேன்.
ஒருவேளை கே.கே.ஆர் போன்ற பெரிய அணியில் எனக்கு கேப்டன் பதவி கிடைத்தால் நிச்சயம் அது எனக்கு மிகப்பெரிய பெருமை தான். ஆனால் எதிர்காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று பொறுமையாக பார்ப்போம். எனக்கு ஒரு அணியில் எந்த ரோல் கொடுக்கப்படுகிறதோ, அதனை நான் கண்டிப்பாக என் முழு திறமையை வெளிப்படுத்தி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.