புதுடெல்லி: இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துகொண்டதை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமானஅசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் பல்வேறு சந்தர்ப்பங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அதோடு, ‘வெறுப்பு மற்றும் வன்முறை சக்தி’ என்று கூறி, வல்லபாய் படேல் தடை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையது. இத்தகைய அமைப்பின் மாநாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்து கொண்டது துரதிருஷ்டவசமானது. இந்திய அரசியலமைப்பு என்பது நீதித் துறையின் சுதந்திரத்தையும், பாரபட்சமற்ற தன்மையையும் எதிர்பார்க்கிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டுவது மிகவும் முக்கியமானது.
இந்திய அரசியலமைப்பு ஜனநாயகமானது. ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அம்பேத்கர் கூறியது போல், ஒரு மன்னருக்கு ஆட்சி செய்ய தெய்வீக உரிமை இல்லை என்பதை போல, பெரும்பான்மையினருக்கு ஆட்சி செய்ய தெய்வீக உரிமை இல்லை. நீதிபதி யாதவின் இந்தப் பேச்சு நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. விஎச்பி-யின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒருவரிடம், ஒரு சிறுபான்மை கட்சி எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி பேசியது என்ன? – பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் ஒரு பிரிவாக இருப்பது விஎச்பி. இது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடிக்க கரசேவை நடத்தியது. முஸ்லிம்களுக்கும் அவர்களது மசூதிகளுக்கும் எதிராக சர்ச்சையான கருத்துகளை விஎச்பி பலமுறை வெளியிட்டுள்ளது. இதன் சட்டப்பிரிவு சார்பில் உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்ற நூலக அரங்கில் ஒரு பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொது சிவில் சட்டம்: அரசியலமைப்பு சட்ட அவசியம், வஃக்பு வாரியச் சட்டம், மத மாற்றம்: அதன் காரணங்களும் தடுப்பு நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளில் இப்பயிலரங்கம் நடைபெற்றன. விஎச்பி சட்டப்பிரிவின் தேசிய இணை அமைப்பாளரான அபிஷேக் அத்ரேயா இதனை தொடங்கி வைத்தார். இப்பயிலரங்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், ‘பொது சிவில் சட்டம்: அரசியலமைப்பு சட்ட அவசியம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது நீதிபதி சேகர் யாதவ் பேசுகையில், “இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதைக் கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு மெஜாரிட்டியாக வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்நாடு செயல்படுகிறது. இதுதான் சட்டம். இதை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும். இதையே ஒரு சமூகம் அல்லது குடும்பத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதிலும் மெஜாரிட்டியின் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதே ஏற்கப்படுகிறது” என்றார்.
கடந்த 2021-ல் பசுவதை குற்றவாளியின் ஜாமீன் வழக்கில், நீதிபதி சேகர் யாதவ், “இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மற்றொரு உத்தரவில் நீதிபதி சேக்கர் யாதவ், ராமர், கிருஷ்ணர், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை இந்திய பாரம்பரியத்தின் அங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் கருத்து கூறியிருந்தார். சேகர் யாதவை போலவே மற்றொரு நீதிபதியான தினேஷ் பாதக்கும் இப்பயிலரங்கில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.