அனைவருக்கும் பசுமை வணக்கம்!
“வேளாண் துறை அமைச்சர் அவர்களே, உங்களுக்கு முன்பிருந்த வேளாண்துறை அமைச்சர், விவசாயிகளுக்கு எழுத்துபூர்வமாக ஏதேனும் வாக்குறுதி அளித்தாரா?
விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். விவசாயிகளிடம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? நாட்டில் எந்தச் சக்தியாலும் விவசாயிகளின் குரலை நசுக்க முடியாது.
விவசாயிகளின் பொறுமையைச் சோதித்தால் … நாடு பெ ரும் விலையை க் கொடுக்க வேண்டி இருக்கும்’’
– நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், எழுப்பியிருக்கும் கேள்விகள்தான் இவை.
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் மும்பையில் நடைபெற்ற விவசாய நிகழ்ச்சியில் பங்கேற்றபோதுதான் இப்படி கேள்வி எழுப்பியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர்.
அரசு விழாவில், நாட்டின் இரண்டாவது குடிமகன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வேளாண்துறை அமைச்சர் பொறுப்பாகப் பதில் சொல்லியிருப்பார் என்று எதிர்பார்த்தால், தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல மௌனமாகவே கடந்துவிட்டார் சிவராஜ் சிங் சவுகான்.
அவசர கதியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை, விவசாயிகளின் கடும் போராட்ட ங்களுக்குப் பின்பு, திரும்பப் பெற்றது பி.ஜே .பி அரசு. நாட்டு மக்களிடமும் விவசாயிகளிடமும் அந்தச் சட்டம் கொண்டு வந்ததற்கு வருத்தமும் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் பேசினார்.
ஆனால், அது அரசியல் நாடகம் என்று அறியாமல், டெல்லியில் போராடிய விவசாயிகள் ஊருக்குப் புறப்பட்டார்கள். இதோ, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை.
‘‘மத்திய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது’’ என்று பொங்கியெழுந்த விவசாயிகள், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து டெல்லி எல்லையில் பழையபடி, பழைய கோரிக்கைளுக்காக… அதுவும் பிரதம ர் நரேந்திர மோடி உத்தரவாதம் கொடுத்த அதே கோரிக்கைகளை முன்வைத்தே போராடி வருகிறார்கள். ‘‘விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வர வேண்டும்…’’ என்பதுதான் அவர்களின் முதன்மையான கோரிக்கை. இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கி, பத்து மாதங்கள் கடந்து விட்டபோதும், கண்டுகொள்ளவே இல்லை மத்திய அரசு.
‘‘பொறுத்தது போதும்… பொங்கி எழு’’ என்று டிசம்பர் 7-ம் தேதியன்று டெல்லிக்கு பேரணியாகப் புறப்பட்டனர் விவசாயிகள். ஆனால், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியதோடு, தடியடியும் நடத்தப்பட்டதால்… பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த முறைபோல விவசாயிகள் இந்த முறையும் ஏமாறுவார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் மத்திய அரசு… ‘‘விவசாயிகளின் பொறுமையைச் சோதித்தால், நாடு பெரும் விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்’’ என்று குடியரசுத் துணைத் தலைவரே சொல்லியிருப்பதை மறந்துவிட வேண்டாம்.
– ஆசிரியர்