நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டும்தான் என்ற நிலை மாறிவிட்டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும், தங்கம், நிலம் வாங்குவதற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் வருமான வரிதாரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்தபோதிலும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், பான் 2.0 திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைப்பதற்கும் வரிவசூல் தொடர் கண்காணிப்பு அமைப்புக்கும் இது உதவும். இதற்காக ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பான் கடந்த 1972-ல் நிரந்தர கணக்கு எண் (PAN) அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணைக் கொண்ட பான் கார்டு வரி செலுத்துதல், வருமான வரிப்பிடித்தல்/வரி செலுத்துதல் (TDS/TCS) போன்ற தனிநபர் அல்லது நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பான் 2.0 மைல்கல் திட்டம்: மேம்பட்ட மின் ஆளுமை மூலம் வரிதாரர்களின் பதிவை நவீனமயமாக்குவதல், தடையற்ற டிஜிட்டல் அனுபவங்களை வழங்குதல், நிர்வகித்தல், செயல்முறையை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும். இத்திட்டம் பயனர்களின் தேவையை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
புதிய குறியீடு அம்சம்: 2017-18 முதல் பான் கார்டுகளிள் QR குறியீடு ஒரு பகுதியாக உள்ளது. பான் 2.0 இன் கீழ், இது பான் தரவுத்தளத்திலிருந்து சமீபத்திய தரவைக் காண்பிக்கும் டைனமிக் QR குறியீட்டுடன் மேம்படுத்தப்படும். QR குறியீடு, பான் விவரங்களைச் சரிபார்த்து, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. விவரங்களைச் சரிபார்க்க பிரத்யேக QR ரீடர் பயன்பாடு உள்ளது. ஸ்கேன் செய்யும் போது, புகைப்படம், கையொப்பம், பெயர், பெற்றோரின் பெயர்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் காட்டுகிறது.
பழைய அட்டை மாற்ற வேண்டுமா? – பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏற்கெனவே உள்ள பான் கார்டு வைத்திருப்பவர்கள் மேம்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் புதிய பான் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தற்போதைய செல்லுபடியாகும் பான் கார்டுகள் வைத்திருப்பவர்கள், புதுப்பித்தல் அல்லது திருத்தம் கோரி, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதனால் உங்கள் நிரந்தர கணக்கு எண்ணை மாற்றாமலேயே, பான் 2.0 இன் கீழ் QR குறியீட்டைக் கொண்ட புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
உலகத்தரத்துக்கு இணையாக பான் 2.0: உலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தனிநபர் அடையாள அட்டை என்ற சமூக பாதுகாப்பு எண் (SSN), தனிப்பட்ட வரி செலுத்துவோர் எண்(UTR) போன்றவை அனைத்து விதமான காப்பீடு, பணப்பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ஒரு தனிநபரின் அனைத்து விதமான நிதி, மற்றும் அது சார்ந்த பரிவர்த்தனைகள், வருமான வரி என அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுகிறது.
அதேபோல், PAN 2.0 திட்டம் தடையற்ற டிஜிட்டல் செயல்முறைகள் மற்றும் வலுவான தரவு பாதுகாப்புடன் வரி செலுத்துவோர் பதிவை மேம்படுத்த உலகளாவிய தரநிலைகளுடன் செயல்படுத்தப்படுகிறது. இது தரம், பாதுகாப்பு மற்றும் சேவை மேலாண்மைக்கான முக்கிய ISO சான்றிதழ்களுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது. எளிமையான ஆன்லைன் செயல்முறைகள், குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளங்கள், வலுவான பாதுகாப்பு மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் மூலம் தரவைப் பாதுகாக்கும் அதே வேளையில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலம் PAN/TAN பதிவை இந்தத் திட்டம் நெறிப்படுத்துகிறது.
பான் தொடர்பான சேவைகள் தற்போது மூன்று வெவ்வேறு தளங்களான இ-ஃபைலிங் போர்டல், யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் மற்றும் புரோடீன் இ-அரசு போர்ட்டலாக உள்ளன. ஆனால், பான் 2.0 திட்டத்தில், அனைத்து PAN/TAN தொடர்பான சேவைகளும் வருமான வரித் துறையின் ஒரே போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படும். இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட பான் 2.0 நடைமுறையில் செயல்படுத்தப்பட இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமையா? வளர்ச்சியா? – மக்கள் இந்த புதிய பான் அட்டையை பெறுவதன் மூலம், பான் தொடர்பான அனைத்து சேவைகளும் மிக விரைவாக வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும். டேட்டா சார்ந்த பிழைகள் அனைத்தும் குறைக்கப்படும். தற்போதுள்ள பான் கார்டுதாரர்களுக்கு இலவசமாகவே அப்கிரேட் செய்யப்படும்.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இந்தியாவின் வரி முறையை நவீனமயமாக்கி ஒருங்கிணைப்பதன் மூலம் வரி செலுத்துவோர் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான அனுபவத்தை பெறலாம். இந்த முன்முயற்சி, சேவைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், தரவு பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, சிறந்த வரி இணக்கம் மற்றும் நிர்வாகத்தை வளர்க்கும் என நம்பப்படுகிறது.
– ஆடிட்டர் ஜி.கே.ஸ்ரீநிவாஸ்