நீலகிரி வரையாடு, தமிழ் மொழியின் பழம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றிருக்கும் வரையாடு தமிழ் நிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான தனித்துவமான சோலை மரக்காடுகளோடு புல்வெளிகள் இணைந்த சூழலில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை இவை. செங்குத்து மலைச்சரிவில் வாழிட சூழலை தகவமைத்துக் கொண்ட வரையாடுகள் தண்ணீர் வங்கிகள் எனப்படும் புல்வெளிகளை பாதுகாத்து நீரோடைகளை ஆண்டு முழுவதும் உயிர்ப்போடு வைத்துள்ளன.
தமிழ்நாடு அரசின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் நோக்கத்தில் நீலகிரி மாவட்டத்தில் முக்கூர்த்தி தேசிய பூங்கா பாதுகாக்கப்படுகிறது. சில ஆயிரங்கள் மட்டுமே எண்ணிக்கை கொண்டுள்ள இந்த உயிரினத்தின் எண்ணிக்கையையும் வாழிட பரப்பளவையும் உயர்த்த ரூபாய் 25 கோடி மதிப்பில் கடந்த 2023- ம் ஆண்டு புராஜெக்ட் தார் எனப்படும் வரையாடு பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
ஆரோக்கியமான வரையாடுகள் சிலவற்றை காடுகளில் கண்டறிந்து அவற்றிற்கு ரேடியோ காலர் பொருத்தி உணவு முறை, வாழிட பரப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதும் இந்த திட்டத்தின் செயல்களில் ஒன்று. சில வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில் வரையாடு ஒன்றிற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியின் போது அந்த வரையாடு பரிதாபமாக உயிரிழந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது வனத்துறை.
இதன் பின்னணி குறித்து தெரிவித்த நீலகிரி வரையாடு திட்ட இயக்குநர் கணேசன் , “முக்கூர்த்தியில் 3 வரையாடுகளுக்கு வெற்றிகரமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரு வரையாட்டிற்கும் மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டது. 4- வது வரையாட்டிற்கு ரேடியோ காலர் பொருத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தி ரேடியோ காலர் கருவி பொருத்தும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து விட்டது.
முந்தைய நான்கு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட அதே நெறிமுறைகளே பயன்படுத்தப்பட்டது. வரையாடு உயிரிழப்பு காரணமாக ரேடியோ காலர் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரையாடுகளை பிடிக்க மாற்று வழிமுறைகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.